×
Saravana Stores

149 ரன்னில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வலுவான முன்னிலை: பும்ரா அபார பந்துவீச்சு

சென்னை: இந்திய அணியுடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 149 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடக்கும் இபோட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்ய… இந்தியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்திருந்தது (80 ஓவர்). அஷ்வின் 102 ரன், ஜடேஜா 86 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். வங்கதேச வீரர் தஸ்கின் அகமது புதிய பந்துடன் பந்துவீச்சை தொடங்கினார். ஜடேஜா 86 ரன் (124 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), ஆகாஷ் தீப் 17, அஷ்வின் 113 ரன் (133 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி தஸ்கின் வேகத்தில் அடுத்தடுத்து வெளியேறினர்.

ஜடேஜா – அஷ்வின் இணை 7வது விக்கெட்டுக்கு 240 பந்துகளில் 199 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பும்ரா 7 ரன் எடுத்து ஹசன் முகமது பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன் குவித்து ஆல் அவுட்டானது (91.2 ஓவர்). வங்கதேச பந்துவீச்சில் ஹசன் முகமது 5, தஸ்கின் அகமது 3, நஹித் ராணா, மெஹிதி மிராஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், இந்திய வீரர்களின் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் 47.1 ஓவரில் 149 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. ஷாகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 32 ரன் எடுத்தார்.

லிட்டன் தாஸ் 22, கேப்டன் ஷான்டோ 20, தஸ்கின், ராணா தலா 11 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். மெஹிதி ஹசன் மிராஸ் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பும்ரா 4, சிராஜ், ஆகாஷ், ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 227 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 10, ரோகித் 5, கோஹ்லி 17 ரன்னில் ஆட்டமிழந்தனர். கில் 33 ரன், ரிஷப் 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, இந்தியா 308 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் வங்கதேச அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

The post 149 ரன்னில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வலுவான முன்னிலை: பும்ரா அபார பந்துவீச்சு appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,India ,Bumrah ,Chennai ,MA Chidambaram Arena ,Chepakkam ,Dinakaran ,
× RELATED துளித் துளியாய்…