×
Saravana Stores

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மீண்டும் சிறையில் அடைப்பு

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாசுக்கு சொந்தமான ரூ100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலம் அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன்(28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரின் தம்பி சேகர் சிபிசிஐடி போலீசாரால் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் கடந்த 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை சிபிசிஐடி போலீசார் சேகரை கஸ்டடி எடுத்து விசாரித்து, மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தொழிலதிபர் பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூடுதலாக கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சேகரிடம் 10 நாள் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கரூர் நீதிமன்றத்தில் வாங்கல் போலீசார் மனு அளித்தனர். ஆனால் நீதிமன்றம் 2 நாள் மட்டும் அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சேகரை போலீசார் வாங்கல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அன்றிரவு 10 மணி வரை அவரிடம் விசாரணை நடந்தது. நேற்று காலை 8 மணி முதல் மீண்டும் விசாரிக்கப்பட்டது. அதேபோல் இன்றும் விசாரணை நடந்து வருகிறது. 2 நாள் கஸ்டடி முடிவடைவதால் சேகரை போலீசார் இன்று மாலை 5 மணி அளவில் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் மீண்டும் ஆஜர்படுத்த ப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.ஆர்.சேகரை செப்.25 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மீண்டும் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Former Minister ,M. R. Vijayabaskar ,M. R. Shekhar ,Karur ,Prakash ,Vangal Kupichipalaya ,Archbishop ,minister ,Dinakaran ,
× RELATED 2026-ல் மட்டுமல்ல எப்போதும் பா.ஜ.க.வுடன்...