மும்பை: இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் கூட்டம் அலைமோதியது. ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை கடந்த 9ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அறிமுகம் செய்தது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 பிளஸ் ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் ஐபோன் பிரியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட் போன்களின் விற்பனை தொடங்கியுள்ளது.
மும்பையில் ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் கவுண்டவுன் கூறி வாடிக்கையாளர்களை ஸ்டாருக்குள் அழைத்தனர். மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு முன்பு கூட்டம் கூட்டமாக ஐபோன் பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று ஐபோன் 16 சீரிஸ் போன்களை வாங்கி சென்றனர். இதற்காக விடிய விடிய வரிசையில் நின்றதாக கூறிய பலர் ஆப்பிள் போன் தங்கள் கைகளில் தவழும் நொடிக்காக ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியாவில் டெல்லி, மும்பையில் மட்டுமே நேரடி விற்பனை நிலையங்கள் உள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஆப்பிள் தயாரிப்புகள் வெளிசந்தையில் விற்பனைக்கு வர கால தாமதம் ஆகும் என்பதால் ஆப்பிள்களின் நேரடி விற்பனை மையங்களில் கூட்டம் அலைமோதுவது வாடிக்கையாக உள்ளது. ஐபோன் 16 சீரிஸ் போன்களுக்கு ரூ.79,900 முதல் ரூ.1,19,900 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
The post இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடக்கம்: டெல்லி, மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் அலைமோதும் கூட்டம் appeared first on Dinakaran.