×
Saravana Stores

ஜோதிட ரகசியங்கள்

ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும்?

ஜோதிட சாஸ்திரம் என்பது ஒரு probable தியரி என்றுதான் சொல்ல வேண்டும். probable என்பதற்கு (that you expect to happen or to be true; likely. நிகழக் கூடியதாக அல்லது உண்மையாக இருக்கக் கூடியதாக எதிர்பார்க்கப்படுகிற; நிகழவாய்ப்புள்ள; எதிர் பார்க்கத்தக்க) என்று அர்த்தம் தரப்பட்டிருக்கிறது. ஜோதிடத்திற்கும் இது பொருந்தும். வெவ்வேறு முறைகள் இருந்தாலும், கிரக நிலைகளை வைத்துக்கொண்டு என்னென்ன நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்கலாம், எதிர்பார்க்கலாம், என்று நாம் ஊகிக்கிறோம் (நிர்ணயிக்கிறோம் அல்ல). இதை இன்னொரு விதத்திலே emphirical ஃபார்முலா என்று எடுத்துக் கொள்ளலாம். கணிதத்திலே Derived ஃபார்முலா என்று ஒன்று இருக்கிறது. emphirical என்று ஒன்று இருக்கிறது.

இதில் Derived பார்முலா என்கிறது முடிவானது. (fixed) emphirical ஃபார்முலா என்பது வித்தியாசப்படுவது. கருத்துகளின் அடிப்படையில் அல்லாது, சோதனைகளையும் நடைமுறை அனுபவத்தையும் சார்ந்த; செயல்முறையை மற்றும் நேருணர்வை அடிப்படையாகக் கொண்ட சில குறிப்பிட்ட தகவல்களை ஆராய்ந்து “இப்படி இருந்தால் இப்படித்தான்” என்று நிர்ணயம் செய்வது. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், ஜோதிடத்தை சொல்பவர்களும் சரி, கேட்பவர்களும் சரி, அதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவத்தைத் தரவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு, தங்கள் வாழ்க்கையை சரிவர அமைத்துக் கொள்ள முடியும். கிரக நகர்வுகள் உண்மை. அதனுடைய பலாபலன்களும் உண்மை. காரணம், இந்த பிரபஞ்சமானது கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிற்றில் இணைக்கப்பட்டிருக்கிறது. எந்தக் கயிறு அசைகிறது அதனுடைய விளைவு எங்கே தெரிகிறது என்பதை அவ்வளவு நுட்பமாக, நமக்கு இருக்கக்கூடிய மனித சக்தியால், கணித அறிவால் தீர்மானித்துவிட முடியாது.

எனவே, ஜோதிடம் உண்மையாக இருந்தாலும், அதைச் சொல்பவர்களின், அதாவது ஜோதிடரின் அறிவும் அனுபவமும் ஒரு அளவுக்கு உட்பட்டதாகத்தான் இருக்கும். அதனால்தான் எந்த ஜோதிடரும் தனக்கு முழுமையாக ஜோதிடம் தெரியும்; தன்னால் 100% சரியான பலன்களைச் சொல்லிவிட முடியும் என்று மார்தட்டிக் கொள்வதில்லை. நூறு பலன்களில் ஒரு பலன் மாறினாலும்கூட தவறு தானே. இந்த வழுக்கல் ஜாதக பலன்களில் சகஜமாக நடைபெறும். அதனால், பெரும்பாலான ஜோதிடர்கள் ஒவ்வொரு ஜாதகமும் எனக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பார்கள். அப்படியானால், கற்றுக் கொள்வதில் நிறைய மீதி இருக்கிறது என்ற பொருள். முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை என்று பொருள்.

முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயத்தை எப்படி முழுமையாக சொல்ல முடியும்? இது ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்ல, எல்லா சாஸ்திரங்களுக்கும் பொருந்தும். மருத்துவம், விஞ்ஞானம் என்று எதைச் செய்தாலும் இப்போதைக்கு இருக்கக் கூடிய அறிவு, அடிப்படையில்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். அதில் தவறு நேரும் பொழுது, ‘‘ஓஹோ, இப்படிச் செய்யக் கூடாது போல் இருக்கிறது, இந்த மருந்து வேறு விதமாக வேலை செய்யும் போல் இருக்கிறது என்று நினைத்து, புதிய மருந்தை கண்டுபிடிப்பது அல்லது புதிய விதிகளை தீர்மானிப்பது என்று அந்தத் துறை வளர்ந்து கொண்டே போகும். எப்பொழுது ஒரு துறை வளர்ந்து கொண்டே போகிறதோ, அப்பொழுது அது முழுமை பெற்றதாக இருக்க முடியாது. இதேதான் ஜோதிடத்திலும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எத்தனையோ ஜோதிடர்கள் அநாயாசமாக பலன்களைக் கூறி பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்களே பல நேரங்களில் முற்றிலும் மாறுபட்ட பலன்கள் சொல்வதையும் கவனித்திருக்கிறேன். இதற்கு ஜாதகம் துல்லியமாக இல்லாதும் ஒரு காரணம் என்று கூடச் சொல்லலாம். ஆனால், நான் இன்னொன்றையும் கவனித்து இருக்கிறேன். ஒருவருக்கு ஒரு நேரத்தில் சொன்ன பலன் பலித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் சொன்ன பலன் தலைகீழாக மாறியும் இருக்கிறது.  ஒரு உதாரணத்தைச் சொல்லுகின்றேன். ஒரு மிகச் சிறந்த ஜோதிடர். 80 வயதுக்கு மேல் ஆகிறது. 50 வருடங்களுக்கு மேல் நல்ல அனுபவம். என்னுடைய நண்பர் ஒருவரின் மனைவியின் ஆயுள் நிலையைப் பற்றி அவர் ஒரு குறிப்பு கொடுத்தார்.

ராகு திசை, புதன் புத்தி என்று நினைக்கிறேன். இந்த புத்தியை இவர் தாண்டுவது கடினம். இது இவருக்கு நிச்சயமாக மாரகத்தைக் கொடுக்கும் என்று அடித்துச் சொன்னார். அவர் சம்பந்தப்பட்டவர்களை பார்க்கவில்லை. வெறும் ஜாதகத்தை மட்டுமே பார்த்துச் சொன்னார். அது அப்படியே நடந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் என்னுடைய நண்பரின் தமக்கைக்கு உடல் நிலைக் கோளாறு ஏற்பட்டது. இது தீருமா தீராதா என்ற சந்தேகம் வந்தது. அப்பொழுது, இவர் துல்லியமாகச் சொல்வதை வைத்துக்கொண்டு இவரிடத்தில் அனுப்பி வைத்தேன். அவரும் கணித்துச் சொல்லும் பொழுது “இவர்களுக்கு இப்பொழுது எந்த மாரகமும் இல்லை. இது (உடல் நிலைக் கோளாறு) தற்காலிகமானது என்று சொன்னார்.

அவர்களும் சாதாரணமானதுதான் என்று நினைத்து அதிகமாக மெனக்கிடவில்லை சொந்த ஊரில் உள்ள மருத்துவரிடமே காண்பித்தார்கள். ஆனால் அந்தக் கட்டி புற்று நோய் கட்டியாக இருந்ததை ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. பிறகு அது பழுத்து மிகப் பெரிய ஆபத்தில் கொண்டு போய்விட்டது. ஓர் இரு நாட்களிலேயே பாவம் அவர் இறந்துவிட்டார்.

ஏதோ ஒரு கணக்கு, எங்கோ ஒரு தவறு. மிகத் துல்லியமாக சொல்லுகின்ற ஜோதிடர் சரியாகத்தான் சொல்லி இருப்பார். ஆகையினால் நாம் அதிகப்படியான மருத்துவத்தை பார்க்க வேண்டியதில்லை என்றுகூட நினைத்திருக்கலாம். இவரே (ஜோதிடர்) இன்னொரு முறை ஒரு ஜாதகத்தைக் காட்டிய பொழுது, ஆயுள் கண்டத்தைக் குறித்து கொடுத்தார். ஆனால், அந்த ஜாதகம் என்னிடத்திலே வந்த பொழுது நான் சொன்னேன்.” அதில் ஒரு சிறிய தவறு இருக்கிறது. அதை ஏனோ அவர் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். சரி, அவர் சரியாகவே கவனித்ததாக இருந்தாலும்கூட, இப்பொழுது அதைக் குறித்து கவலைப் பட வேண்டியதில்லை. இதை ஒரு எச்சரிக்கையாக கொண்டு தீவிரமாக மருத்துவத்தைப் பார்ப்போம்” என்று சொல்லி அந்த நோய்க்கு புகழ்பெற்ற மருத்துவரிடம் காண்பித்தோம். அதற்குப் பிறகு அவர் 12 ஆண்டுகள் உயிரோடு இருந்து மறைந்தார்.

இன்னொரு அனுபவம் எனக்கு இருக்கிறது. என்னுடைய ஒன்று விட்ட சகோதரர் புற்றுநோயினால் சிரமத்தில் இருந்த பொழுது, ஒரு ஜோதிடர் அடிக்கடி வந்து பார்ப்பார். அவரிடம் காட்டிய பொழுது, அவர் ஜாதகம் பார்த்துவிட்டு ‘‘இவரை வெட்டிப் போட்டாலும் சாக மாட்டார் இப்பொழுது இவருக்கு மாரக திசை எதுவும் கிடையாது. நீங்கள் தைரியமாக இருக்கலாம்’’ என்று சொல்லிவிட்டு சென்றார். ஆனால் அவர் சொன்ன பத்தாவது நாளில் என்னுடைய சகோதரர் அந்த நோய்க்கு பலியானார். எனவே ஜோதிடத்தை எப்பொழுது பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்? சொல்பவர்கள் எப்படிச் சொல்ல வேண்டும்? கேட்பவர்கள் அதை எந்த அளவுக்கு கேட்க வேண்டும்? என்பதைக் குறித்து மிகத் தெளிவான சிந்தனை வேண்டும்.

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ ஐயப்பன் கவசம்