தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயம்
தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தை ராஜராஜசோழன்தான் கட்டினான் என்பது பல நூறு ஆண்டுகளுக்கு யாருக்கும் தெரியாது. அதனால், இந்தக் கோவிலைப் பற்றி பல கற்பனைக் கதைகள் வலம் வந்தன. கிருமி கண்ட சோழன் கட்டினான் என ஒரு சிலரும் காடு வெட்டிச் சோழன் கட்டினான் என ஒரு சிலரும் கூறிவந்தனர். 1886ல் இந்தியத் தொல்லியல் துறையில் கல்வெட்டியல் துறை துவங்கப்பட்டபோது, ஜெர்மனியைச் சேர்ந்த யூஜின் ஜூலியஸ் தியோடர் ஹூல்ஸ் என்பவர் அந்தப் பிரிவின் தலைமைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.
தென்னிந்தியாவில் உள்ள பல கல்வெட்டுகளை படித்து எபிகிராபியா இன்டிகா என்ற தொகுப்பு நூலின் பல பகுதிகளை பதிப்பித்தார். அசோகரின் கல்வெட்டுகளை படித்து விளக்கிய இவர், தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் இருந்த கல்வெட்டுகளை படித்து, அதனை எபிகிராபியா இன்டிகாவின் இரண்டாம் தொகுப்பில் விளக்கினார்.அப்போதுதான் இந்தக் கோவிலைக் கட்டியவர் ராஜராஜ சோழன் என்று தெரியவந்தது.
அதற்குப் பிறகு, சென்னை மாகாணத்தில் தலைமைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமிக்கப்பட்ட வலையத்தூர் வெங்கையா 1892ல் பதிப்பித்த தென் இந்தியக் கல்வெட்டுகள் என்ற நூலை வெளியிட்டார். அதில் பெருவுடையார் கோவிலின் கல்வெட்டுகள் தெளிவாக விளக்கப்பட்டிருந்தன. அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்த, ‘‘பாண்டி குலாசினி வலநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத்தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்”என்ற வாக்கியம், இதைக் கட்டியவன் ராஜராஜசோழன் என்பதை ஐயமின்றி உறுதி செய்தது.தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில். எத்தனையோ நம்பிக்கைகளும், கதைகளும் இந்தக் கோவிலைப் பற்றி உலா வருகின்றன.
கோவிலின் சிறப்புகள்
இந்தியாவில் மிகப்பெரிய இந்துக் கோவில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதில் திருவரங்கம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில், தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோவில் ஆகிய கோவில்கள் நிச்சயம் இடம்பெறும்.இதில் தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயம் ஒரு தனித்தன்மை வாய்ந்தது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய விமானத்தை உடைய கோவிலாக விளங்குகிறது. கி.பி.850ல் விஜயாலயச் சோழன் சோழ பேரரசை நிறுவியபோது, தஞ்சையை சோழ நாட்டின் தலைநகரமாக ஆக்கினான். அதன் பிறகு சுமார் 176 ஆண்டுகள், அதாவது ராஜேந்திரச் சோழனின் முதல் பத்தாண்டுகள் வரை தஞ்சையே சோழர்களின் தலைநகராக இருந்தது.
இந்த ஆண்டுகளில் தஞ்சாவூரில் மிகப் பெரிய அரண்மனைகளும் கோவில்களும் கட்டப்பட்டன. கி.பி. 1218ல் தஞ்சை மீது படையெடுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சையை முழுதுமாக அழித்தான். ஆனால், கோவில்களை அவன் அழிக்கவில்லை. அதன் பிறகு மாலிக்காபூர் படையெடுப்பில் கோவில்கள் தாக்கப்பட்டாலும், பெருவுடையார் கோவில் பெரும் சேதமின்றி தப்பியது. ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தபிறகுதான் சோழநாடு வளமடைய ஆரம்பித்தது. மதுராந்தகன் என்ற உத்தம சோழன் மறைந்த பிறகு ராஜராஜசோழன் கி.பி.985ல் ஆட்சிக்கு வந்தான். அதன் பிறகு தான் தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் தலைமைக் கட்டடக் கலைஞனாக வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் நியமிக்கப்பட்டார்.
தஞ்சைப் பகுதி மலைகளே இல்லாத சமவெளிப் பகுதி என்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்னாண்டார் கோவில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்களையே இங்கு பயன்படுத்தினார்கள். தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றிச் சொல்லப்படும் கதைகளில் முக்கியமான கதை, கோவில் விமானத்தின் மேல் உள்ள கல் 80 டன் எடையைக் கொண்டது என்றும் இதனை அழகி என்ற கிழவி பரிசாகக் கொடுத்தாள் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், ஸ்தூபி வரை இக்கட்டுமானம் முழுவதும் பல துண்டுக் கற்களால் ஆனது என்பதை தன் ராஜராஜேச்சுரம் நூல் மூலம் உறுதி செய்துள்ளார் குடவாய் பாலசுப்பிரமணியன். 216 அடி உடைய விமானத்தைப் பொறுத்தவரை அவை எப்படி கட்டப்பட்டன என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் கிடையாது. சாரப்பள்ளம் என்ற ஊரில் இருந்து சாரம் அமைத்து உச்சியில் உள்ள கல்லை ஏற்றினர் என்று பல நூறு ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தாலும் அது கதை என்கிறார் பாலசுப்பிரமணியன்.
மாறாக எகிப்து நாட்டில் பிரமிடுகளை கட்டப் பயன்படுத்திய சுருள் சாய்வு தளம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கோவில் கட்டப்பட்ட பிறகு இந்த சாய்வுதளம் அகற்றப்பட்டிருக்கலாம் என்று அவர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.இந்தக் கோவிலைப் பற்றிக்கூறப்படும் இன்னொரு கதை, இந்தக் கோவிலின் விமானத்தின் நிழல் மற்றும் கலசத்தின் நிழல் தரையில் விழாது என்று கூறுவது. அது தவறு, விமானத்தில் எல்லா பகுதியின் நிழலும் தரையில் விழுவதைப் பார்க்க முடியும். அதேபோல, பெருவுடையார் முன்பு உள்ள நந்தி தினமும் வளர்ந்து வந்ததாகவும் அதன் தலையில் ஆணி ஒன்றை அடித்து வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதாகவும் கூறுவார்கள். நந்தியே பிற்கால மன்னர்களால் அங்கு வைக்கப்பட்டது. ராஜராஜன் காலத்தில் உருவாக்கப்பட்ட நந்தி தற்போது திருச்சுற்று மாளிகையில் உள்ளது.
தஞ்சை பெரிய கோவில், வெறும் கோவில் மட்டுமல்ல, அது ஒரு கலைக்கூடம். காரணம், அதில் அற்புதமான சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை கொண்டிருந்தது. ஆனால் தற்போது கருவறை சுற்றறையில் மட்டுமே ஓவியங்கள் உள்ளன. நாயக்க மன்னர்கள் தஞ்சையை ஆட்சி செய்தபோது, இந்த ஓவியங்கள் மீது சுண்ணாம்பு பூசப்பட்டு, நாயக்கர் கால ஓவியங்கள் வரையப்பட்டன. அவை சிதைந்த போதுதான் அதற்கு பின் இருந்த சோழர் கால ஓவியங்கள் வெளிப்பட்டன. இதையடுத்து இந்தியத் தொல்லியல் துறை தொடர்ந்து சோழர் கால ஓவியங்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.
இந்தக் கோவிலின் கட்டுமானம் மிகவும் அற்புதமான ஒன்று. ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் இடையில் எவ்விதமான ஒட்டுப் பொருளும் பயன்படுத்தாமல் கற்களை மிக நேர்த்தியாக இடைவெளியின்றி அடுக்கி, மேலே உள்ள கற்களின் எடையால் அவை நிற்கும்படி செய்யப்பட்டுள்ளன. கோவிலின் கர்ப்பகிரகத்தைப் பொறுத்தவரை, உள்ளே லிங்கத் திருமேனியை வைத்த பிறகே, சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. தற்போது கோவிலைச் சுற்றியுள்ள அகழி, கோட்டைச் சுவர்கள், கொத்தளங்கள் ஆகியவை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டவை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
(தரிசனம் தொடரும்!)
தொகுப்பு: திலகவதி
The post ராஜகோபுர தரிசனம்! appeared first on Dinakaran.