*சரணாலயத்திற்கு பறவைகள் வரத்து குறைந்தது
நெல்லை : நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள கூந்தன்குளம் கிராமம் 1994ம் ஆண்டு முதல் பறவைகள் சரணாலயமாக செயல்பட்டு வருகிறது. கூந்தன்குளத்திற்கு சைபீரியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. பின்டைல், பிளாக்விங்டு ஸ்டில், கிரேகிரேன், கிரின்சங், பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து கூடுகட்டி குஞ்சு பொரிக்கும். வெள்ளை அரிவாள் மூக்கன், பெலிக்கன், நீர்காகம், சாம்பல் நாரை உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளுக்கு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சீசன் காலத்தில் இங்கு தங்கி செல்வது வழக்கமாகும்.
தற்போது கூந்தன்குளத்தில் சீசன் இல்லையென்றாலும், ஆண்டு முழுவதும் இக்குளத்தில் பறவைகளை காண இயலும். இங்குள்ள குளம் மற்றும் ஊர்பகுதி மரங்களில் கூடுகட்டி தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்த உள்நாட்டு பறவைகள், ஆடி அமாவாசையோடு சீசன் முடிந்து தங்கள் பகுதிகளுக்கு திரும்பி சென்றுவிட்டன. இவ்வாண்டு கூந்தன்குளத்தில் கூழக்கடா, பவளக்கால், செங்கால்நாரை, மஞ்சள்மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் அதிகம் காணப்பட்டன.
இந்நிலையில் கடந்த மாதம் வரை செங்கால்நாரை பறவைகள் குளத்தில் அதிகமாக குளத்தில் காணப்பட்டதாக பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்தனர். பட்ட தலைவாத்து, கல்குருவி, வானம்பாடி உள்ளிட்ட பறவைகளும் குளத்தில் அதிகம் வசித்து வந்தன. நடப்பு செப்டம்பர் மாதத்தில் மே மாதம் போல் வெயில் கொளுத்துவதால், கூந்தன்குளம் தண்ணீரின்றி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.
இங்குள்ள மரங்களும் இலை துளிர்கள் இன்றி, பட்ட மரமாக காட்சியளிக்கின்றன.குளத்திற்குள் காணப்படும் பட்ட மரங்களில் கூடுகள் அனைத்தும் பறவைகள் இன்றி வெறுமனே காட்சியளிக்கின்றன. அப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் கூட தண்ணீருக்காக குளத்தில் மூலைக்கு வெகுதூரம் நடந்து செல்ல வேண்டியதுள்ளது. சில சமயங்களில் மோட்டார் பம்பு செட்டுகளில் இருந்து வாய்க்காலில் வரும் தண்ணீரையே ஆடு, மாடுகள் குடிக்க ஏற்பாடு செய்ய வேண்டியதுள்ளது. இந்நிலையில் உள்ளூர் பறவைகள் மட்டுமே சிறிதளவு அங்கு தலைக்காட்டி செல்கின்றன.
இதுகுறித்து கூந்தன்குளம் ஊர்மக்கள் கூறுகையில், ‘‘கூந்தன்குளம் இவ்வாண்டு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்திற்கு பிறகு, இதுநாள் வரை உருப்படியான மழையை இப்பகுதி பெறவில்லை. இதனால் வறட்சியை எதிர்கொண்டுள்ளோம். கூந்தன்குளத்தில் நல்ல சீசன் நிலவும் போது ஒரு லட்சம் வரை பறவைகள் வந்து செல்வது வழக்கம். இப்போது வெயில் கொளுத்துவதை பார்த்தால், கோடை வெயிலை விட கொடூரமாக உள்ளது. அடுத்த மாதத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கிறோம். அப்போது பறவைகளுக்கான சீசனும் தொடங்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.
The post கோர வெயிலின் பிடியில் செப்டம்பர் மாதம் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கும் கூந்தன்குளம் appeared first on Dinakaran.