×
Saravana Stores

அர்ச்சகர் பள்ளி ஹெச்எம்மிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர் மீது வழக்கு

சென்னை: திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சி பள்ளியின் பார்வை மாற்றுத்திறன் தலைமை ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையராக பணியாற்றி வருபவர் குமாரதுரை. இவர், கடந்த 27.10.2021 முதல் 10.5.2022 வரை மதுரை இணை ஆணையராகவும், கூடுதல் பொறுப்பாக திருச்செந்தூர் கோயில் இணை ஆணையராகவும் பணியாற்றினார்.

கடந்த 2007ல் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராவதற்கு வசதியாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை தமிழ்நாடு அரசு நிறுவியது. திருவண்ணாமலை, மதுரை, பழநி, திருச்செந்தூர், சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டன. இதில் திருச்செந்தூரில் உள்ள பயிற்சி பள்ளியில் பாலமுருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி.

அவருக்கு 7வது ஊதியக்குழு ஊதிய நிர்ணயத்தில் குளறுபடிகளை களைந்தால் ரூ.10 லட்சம் வரை நிலுவைத் தொகை வரும் என்பதால், அதற்காக அப்போதைய இந்துசமய அறநிலையத்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளார். இதை பரிசீலித்து அறிக்கை அனுப்புமாறு அப்போதைய இணை ஆணையர் குமாரதுரைக்கு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அவரை பாலமுருகன் அணுகியபோது ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதற்கு முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை 17.12.2021ல் இணை ஆணையர் குமாரதுரையின் மேஜையில் பாலமுருகன் வைத்துள்ளார். சிசிடிவி கேமரா இருந்ததால் பணம் வாங்க மறுத்து பணத்தை டபேதாரான சிவாவிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதை எல்லாம் பாலமுருகன் செல்போனில் பதிவு செய்துவிட்டு, டபேதார் சிவாவிடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பின்னர் வீடியோ காட்சியை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பினார். இதையடுத்த இணை ஆணையர் குமாரதுரை மீது தூத்துக்குடி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post அர்ச்சகர் பள்ளி ஹெச்எம்மிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Joint ,Kanchipuram Charity Department ,Archakar Palli ,CHENNAI ,Kanchipuram Charities Department ,Joint Commissioner ,Headmaster ,Visually Impaired ,Tiruchendur Archakar Training School ,Kanchipuram ,Deputy Commissioner ,Charity Department ,Dinakaran ,
× RELATED சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டம் : தடை நீக்கம்