×
Saravana Stores

ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான திருப்பதி லட்டுவில் மாடு, பன்றி கொழுப்பு: உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் மாடு, பன்றி இறைச்சி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டது என்று உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள ஒரு லட்டு ரூ.50 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தில் 1 கோடி லட்டுகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்டுவின் சுவையை அதிகரிப்பது தரமான பசு நெய் தான். ஆனால் லட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த முறைகேட்டின் மூலம் நெய் சப்ளை செய்தவர்கள் அதில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்றுமுன்தினம் குற்றம் சாட்டியிருந்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டிற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் சந்தேகம் எழுந்தது.

இதையொட்டி முன்பு நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட நெய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குஜராத் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையில் நெய்யில் 37 சதவீதம் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வு அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஆய்வறிக்கை ஜெகன் மோகன் ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கி பெறப்பட்ட நெய்யில் சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ், ராப்சீட், ஆளி விதை, பருத்தி விதை, மீன் எண்ணெய், பாமாயில் மற்றும் மாட்டிறைச்சி, பன்றி கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த நெய் சப்ளை செய்த நிறுவனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆய்வு அறிக்கை அடிப்படையில் இனி அந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் பங்கேற்காத வகையில் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனம் தேவஸ்தானத்திற்கு செலுத்திய முன் வைப்பு தொகை திரும்ப தர முடியாது என தெரிவிக்கப்பட்டிருப்பதோடு அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரவும் தேவஸ்தானம் திட்டமிடப்பட்டுள்ளதாக செயல் அதிகாரி ஷியாமளா ராவ் இதற்கு முன்பே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* சிபிஐ விசாரணை வேண்டும்
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா ேநற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் கூறி இருப்பது இந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தும் செயலாகும். கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் தெய்வமான வெங்கடேச பெருமாளுக்கு களங்கம். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளில் அரசியல் நோக்கம் இல்லை என்றால் நெய்க்குப் பதிலாக விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்பது உறுதி என்றால் உடனடியாக உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும். அல்லது சிபிஐ கொண்டு விசாரிக்கவும். பெரும் பாவமும், கொடிய தவறும் செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து உண்மையை கண்டறிய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான திருப்பதி லட்டுவில் மாடு, பன்றி கொழுப்பு: உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tirupati ladtu ,Tirumala ,Tirupati Eyumalayan ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாத உற்சவங்கள் அறிவிப்பு