×
Saravana Stores

ஹேமா கமிட்டி அறிக்கையில் புகார் 20 நடிகைகளுக்கு பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணை குழு அதிர்ச்சி

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் 20க்கும் மேற்பட்ட நடிகைகள் மிக மோசமான பாலியல் கொடுமைகளை அனுபவித்து உள்ளனர் என்று ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்கள் அனுபவிக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நடிகைகளின் புகார்கள் குறித்து விசாரிக்க ஏடிஜிபி தலைமையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை கேரள அரசு நியமித்தது. இந்தநிலையில் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை சமீபத்தில் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. 3896 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் சிறப்பு விசாரணைக் குழு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு விசாரணைக் குழு படித்துப் பார்த்தது. அதில் நடிகைகள் அனுபவித்த பல்வேறு பாலியல் கொடுமைகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக 20க்கும் மேற்பட்ட நடிகைகள் மிக மோசமான பாலியல் சித்ரவதைகளுக்கு ஆளானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது சிறப்பு விசாரணைக் குழுவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து முதல் கட்டமாக அவர்களைக் கண்டுபிடித்து மீண்டும் வாக்குமூலம் பெற சிறப்பு விசாரணைக் குழு தீர்மானித்து உள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் அவர்களை சந்தித்து விவரங்களைத் திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரும்பினால் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் சிறப்பு விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.

* சென்னை, துபாயில் விபச்சாரம் மலையாள நடிகர் முகேஷ் புகார் கூறிய நடிகை மீது இளம்பெண் குற்றச்சாட்டு
பிரபல மலையாள நடிகர் முகேஷ் மீது பலாத்கார புகார் கூறிய நடிகை தன்னை 16 வயதில் விபச்சாரத்தில் தள்ளிவிட முயற்சித்ததாக ஒரு இளம்பெண் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப்பிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து அந்த இளம்பெண் கூறியதாவது: நடிகர் முகேஷ் மீது பலாத்கார புகார் கூறிய நடிகை என்னுடைய உறவினர் .

கடந்த 2016ல் எனக்கு 16 வயது இருக்கும்போது சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சென்னைக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள ஒரு இடத்திற்கு சென்றபோது அங்கு சில ஆண்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் திடீரென என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். அதிர்ச்சியடைந்த நான் அழுது கூக்குரலிட்டதால் பயந்து என்னை அவர்கள் உடனடியாக விடுவித்தனர்.

நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை விபச்சாரத்தில் தள்ளி விடுவதற்காகத் தான் அந்த நடிகை சென்னைக்கு அழைத்துச் சென்றார் என பின்னர் தான் எனக்குத் தெரியவந்தது. என்னைப் போலவே பல சிறுமிகளை அவர் இதேபோல ஏமாற்றி சென்னை மற்றும் துபாய்க்கு அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். அவர் செக்ஸ் மாபியா கும்பலைச் சேர்ந்தவர். முகேஷ் மீது புகார் கூறி, தான் ஒரு நல்ல பெண் என்பது போல நடிப்பதால் தான் நான் அவர் மீது புகார் கொடுக்க தீர்மானித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஹேமா கமிட்டி அறிக்கையில் புகார் 20 நடிகைகளுக்கு பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணை குழு அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Hema committee ,Special ,Thiruvananthapuram ,
× RELATED ஒரே காவல்துறை, ஒரே போலீஸ் நிர்வாகம்...