- திருமலா
- முன்னாள் அறங்காவலர் குழு
- ஆந்திரா
- முதல் அமைச்சர்
- திருப்பதி
- லட்டு பிரசாத்
- விஜயவாடா
- சந்திரபாபு
- நாயுடு
- ஆந்திரப் பிரதேசம்
திருமலை: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் என ஆந்திர முதல்வர் கூறிய குற்றச்சாட்டுக்கு முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் மறுத்துள்ளனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் விஜயவாடாவில் கூட்டணி கட்சியின் சார்பில் விழா நடந்தது. இதில் முதல்வர் சந்திரபாபு கலந்துகொண்டு பேசுகையில், `கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னப்பிரசாதங்கள் கூட தரமற்று பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. லட்டு பிரசாத நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அனைத்தையும் மாற்றி தரமானவையாக கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்’ என கூறினார். ஆந்திர முதல்வரின் இந்த குற்றச்சாட்டு அனைவரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வரின் குற்றச்சாட்டை மறுத்து திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் சுப்பாரெட்டி மற்றும் கருணாகர ரெட்டி ஆகியோர் நேற்றிரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்ததாக முதல்வர் கூறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.
அவரது குற்றச்சாட்டை ஏழுமலையான் கூட மன்னிக்க மாட்டார். அலிபிரியில் தன்னை குண்டு வைத்து கொல்ல சதி திட்டம் நடந்ததாக கூறி அதை வைத்து அரசியல் செய்தவர்தான் சந்திரபாபு. விஜயவாடா வெள்ளம் பாதிப்பு மற்றும் பிரச்னைகளை திசை திருப்பவே இதுபோன்ற புதிய பிரச்னையை அவர் கிளப்பியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்குவார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பிரசாத விவகாரத்தில் எங்கு அழைத்தாலும் குடும்பத்துடன் நாங்கள் சத்தியம் செய்ய தயார். அதேபோன்று சந்திரபாபு சத்தியம் செய்ய தயாரா? இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post `ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம் appeared first on Dinakaran.