திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏரியில் இன்று காலை பெண் சாமியார் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் ஏரி உள்ளது. சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் ஆங்காங்கே குட்டைபோல் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை ஏரிக்கு கால்நடைகளை மேய்ப்பதற்காக அப்பகுதி மக்கள் வழக்கம்போல் ஓட்டிச்சென்றனர். அப்போது ரத்த வெள்ளத்தில் கண்ணாடி அணிந்திருந்த ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது கழுத்தில் வெட்டப்பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலையான பெண்ணுக்கு சுமார் 50 வயது இருக்கும். அவர் காவி நிறத்தில் சேலை அணிந்திருந்தார். எனவே அவர் பெண் சாமியாராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் அவர் வைத்திருந்த கைப்பையில் சென்னை ஆவடியில் இருந்து பூந்தமல்லி வரை செல்லும் பஸ் டிக்கெட் இருந்தது. அவர் அணிந்திருந்த கண்ணாடி புதிதாக வாங்கப்பட்டுள்ளது.
அந்த கண்ணாடி வைக்கும் பையில், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு ஆப்டிக்கல் பெயர் இருந்தது. எனவே, அவர் சென்னை பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும், அவரை யாரோ வெட்டிக்கொலை செய்திருக்கலாம் எனவும் தெரியவந்தது. இதையடுத்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையானவர் யார்? அவரை கொன்றவர்கள் யார்? சென்னையை சேர்ந்தவர் என்றால் அவர் இங்கு வந்தது ஏன்? அவருடன் வந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்யும் போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஏரியில் பெண் சாமியார் வெட்டிக்கொலை: சென்னையை சேர்ந்தவர்? appeared first on Dinakaran.