×

தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்வேல் (53). இவரது மனைவி பிரேமா (48). இவர்களுக்கு சங்கீர்த்தனா (22) என்ற மகளும், சிஷாந்த் (21) என்ற மகனும் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வரும் நிலையில் கேஸ்ட் இன நாய் ஒன்றினை கடந்த ஆறு ஆண்டுகளாக செல்லமாக வளர்த்து வந்தனர். மேலும், அதற்கு ஷேடோ என்று பெயரிட்டு வீட்டில் ஒருவராகவே வளர்த்தனர். இந்நிலையில், வளர்ப்பு நாய் ஷேடோ நேற்று முன்தினம் மாலை வீட்டைவிட்டு வெளியே வந்த போது அங்கிருந்த தெரு நாய்கள் ஷேடோவை கடித்தன.

இதில் காயமடைந்த வளர்ப்பு நாய் ஷேடோ உயிருக்கு போராடியது. அதனை மீட்ட குடும்பத்தினர் வளர்ப்பு பிராணிகளுக்கான மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர், அதை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்திருந்த நிலையில் திடீரென பரிதாபமாக ஷேடோ உயிரிழந்தது. இதனையடுத்து வீட்டில் ஒருவராக வளர்த்து வந்த செல்ல நாய் உயிரிழந்ததால் அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக வீட்டில் ஒருவர் இறந்தால் எவ்விதமான ஈமக்காரியங்கள் செய்வோமோ அதேபோல் மாலை அணிவித்து, விளக்கேற்றி வைத்து கதறி அழுதனர்.

தொடர்ந்து நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வளர்ப்பு நாய் ஷேடோவை ஊர்வலமாக எடுத்துச்சென்று அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அருள்வேல் குடும்பத்தினர் கூறுகையில், “கடந்த ஆறு ஆண்டுகளாக வளர்த்து வந்த எங்களது செல்ல மகன் உயிரிழந்ததை தற்போது வரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் இந்த வீட்டிற்கு வந்த நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் அதன் பிறந்தநாள் விழாவை விமரிசையாக கொண்டாடி வந்தோம். ஆனால், தற்போது எங்களை விட்டு சென்று விட்டான். இதனால், தாங்க முடியாத துயரத்தில் உள்ளோம்’’ என்றனர்.

The post தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Leschi ,Mettupalayam ,Arulvel ,Mani Nagar ,Prema ,Sankeerthana ,Sishant ,Lesichi ,
× RELATED கல்லாறு பர்லியாறு இடையே...