- குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில்
- குன்ராடத்தூர்
- குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில்
- வடதிருநள்ளாறு
- காஞ்சிபுரம் மாவட்டம்
குன்றத்தூர், செப்.19: வடதிருநள்ளாறு என்று அழைக்கப்படும் குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயிலில் பீரோ தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் கோயிலில் தீவிபத்து நிகழ்ந்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் தெய்வ புலவர் சேக்கிழார் பெருமானால் கட்டப்பட்ட கோயில். நவக்கிரக பரிகார ஸ்தலங்களில் ராகு தலமாக கோயில் உள்ளது. மேலும், இந்த கோயில் ‘வட திருநள்ளாறு’ என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் மூலஸ்தானம் பகுதியில் முக்கிய பொருட்கள் வைப்பதற்காக மரத்தால் ஆன பீரோ ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயிலின் நடை சாத்தப்பட்ட பிறகு, மூலஸ்தானத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபத்தை அணைக்காமல் சென்றதால் அருகில் இருந்த மர பீரோவின் மீது நெருப்பு பட்டு பீரோ குபுகுபுவென தீப்பிடித்து எரியத் தொடங்கி உள்ளது. திடீரென கோயிலின் உள்ளே இருந்து கரும்புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கோயில் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோயில் ஊழியர்கள் வந்து பார்த்தபோது மூலஸ்தானத்தில் இருந்த மர பீரோ தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, தீயை அணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் பீரோவில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதையடுத்து கோயில் அதிகாரிகள் எரிந்துபோன மர பீரோவை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றினர். தொடர்ந்து, கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மூலஸ்தானத்தில் எரிந்து கொண்டிருந்த தீபத்தை அணைக்காமல் சென்றதே தீ விபத்திற்கான காரணம் என்று தெரியவந்தது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்களால் தீ விபத்து நிகழ்ந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
The post குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயிலில் பீரோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.