×
Saravana Stores

ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது

துவரங்குறிச்சி: ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலனை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்து பணம் பறித்த நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் சொரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ்குமார் (20), அதே பகுதியை சேர்ந்தவர் 19 வயது பெண். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். திருச்சியில் வெவ்வேறு கல்லூரிகளில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர்கள், கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி கல்லூரிக்கு சென்ற இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. கல்லூரி நண்பர்களிடம் விசாரணை செய்தபோது, இருவரும் திருமணம் செய்வதற்காக மதுரையில் நண்பரின் வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 16ம்தேதி சொரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் அருணகிரி, சாமிக்கண்ணு, கார்த்திக், பிரவீன்குமார் மற்றும் 2 நபர்கள் மதுரை அடுத்த இலுப்பக்குளத்திற்கு சென்றனர். அங்கு காதலர்கள் இருவரையும் மடக்கி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி திருச்சி கொண்டு வந்தனர். சந்தோஷ்குமார் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காரில் வைத்து அவரை அசிங்கமாக திட்டியதோடு, தீயில் பழுக்க வைத்த கம்பியை கொண்டு அவரது ஆண் உறுப்பை நசுக்கியதாகவும், ஆணவக்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. உடன் சென்ற நண்பர்களும், சந்தோஷ் குமாரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கபணம் மற்றும் அவரது செல்போனை பறித்து கொண்டனர். பின்னர் அவரது பெற்றோரை துவரங்குறிச்சி அருகே உள்ள மோரணி மலைக்கு வரச்சொல்லி அவருடன் சந்தோஷ்குமாரை அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சந்தோஷ்குமார் வளநாடு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிந்து அருணகிரி (35), பிரவீன் குமார் (24), கார்த்திக் (37) ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செப்.30ம் தேதிவரை திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும் சாமிக்கண்ணு உள்ளிட்ட 3 பேர தேடி வருகின்றனர். கைதான அருணகிரி, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார். 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட்டவர். இவர் சமீபத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nathaka State Administrator ,Duwarankurichi ,Nathaka ,administrator ,Trichy District ,Marungapuri Union ,Dinakaran ,
× RELATED துவரங்குறிச்சி அருகே சாலை விபத்தில் மாணவன் பலி