×
Saravana Stores

பண்டிகை கால தேவை, வரி குறைப்பு எதிரொலி : இந்தியாவில் ஒரே மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 3 மடங்கு அதிகரிப்பு !!

டெல்லி : பண்டிகை கால தேவை மற்றும் இறக்குமதிக்கான வரி குறைப்பு ஆகிய காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி ஒரே மாதத்தில் 3 மடங்காக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிக சுப முகூர்த்த நாட்கள் என்பதால் மக்கள் அதிகம் தங்கம் வாங்குவது வழக்கம். இதனால் தங்க நகை விற்பனையும் அதிகரிக்கும். இதையொட்டி ஜூலை மாதத்தில் 26,000 கோடி ரூபாய்க்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட சூழலில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 84,000 கோடி அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுளளதாக ஒன்றிய வர்த்தக அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

தங்கத்தின் இறக்குமதி ஒரே மாதத்தில் 221.41% ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஏறத்தாழ 3 மடங்கு அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 13 ஆண்டுகளாக 15% ஆக இருந்த நிலையில், அவை கடந்த ஒன்றிய பட்ஜெட்டில் 6% ஆக குறைக்கப்பட்டது. இதனால் இந்த வரி குறைப்பும் தங்கம் இறக்குமதிக்கு காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே சுவிட்சர்லாந்தில் இருந்து அதிகபட்சமாக 40 சதவீத தங்கம் இறக்குமதியாகி உள்ளது. அதை தொடர்ந்து அமீரகத்தில் இருந்து 16 சதவீதமும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 10 சதவீதமும் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஒன்றிய வர்த்தகத் துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

The post பண்டிகை கால தேவை, வரி குறைப்பு எதிரொலி : இந்தியாவில் ஒரே மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 3 மடங்கு அதிகரிப்பு !! appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Dinakaran ,
× RELATED வாட்ஸ் ஆப்-ஐ தடை செய்யக் கோரிய மனு தள்ளுபடி