ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு 10 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக காஷ்மீரில் 16, ஜம்முவில் 8 என மொத்தம் 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக அங்கு தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாகத் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்படும். இந்தவகையில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக, காஷ்மீர் பகுதியில் உள்ள 16 தொகுதிகள் ஜம்மு பகுதியில் உள்ள 8 தொகுதிகள் என மொத்தம் 24 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவானது காலை 7 மணி அளவில் தொடங்கியுள்ளது.
காலை குளிர் அதிகமாக இருப்பதாக சற்று மந்தமாகவே வாக்குப்பதிவு நடைப்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 மாவட்டங்களில் உள்ள 219 வேட்பாளர்கள் இந்த முதற்கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் 90 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர். இவர்களில் மூவர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில், களமிறங்கும் முக்கிய கட்சிகளாக பாஜக, காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக்கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) , அவாமி இத்தேஹாத் கட்சிகள் உள்ளன. இங்கு, பாஜக ,காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக்கட்சி என மும்முனைப்போட்டி நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தலில் வாக்காளிக்கும் வாக்காளர்கள் 23,27,580. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 11,76,462 , பெண் வாக்காளர்கள் 11,51,058. மொத்தமுள்ள 3276 வாக்குச்சாவடிகளில், 14,000 தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
கூடுதலாக, 2019 இல் ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நடைபெறும் சட்டமன்றத்தேர்தல் என்பதால் இத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முதற்கட்ட தேர்தலுக்காக ராணுவம், சிஆர் எப் உள்ளிட்டவை காஷ்மீர் துறையுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹா கட்சி- ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி, ஆம் ஆத்மி உள்ளிட்டவை களத்தில் உள்ளன.
இதனிடையே, “ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்; அனைத்து மக்களும் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்; இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.