பெரம்பூர்: அயனாவரம் சோலை 3வது தெருவில் வசித்து வருபவர் நிவாஸ் என்கிற சோலை நிவாஸ் (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சச்சின் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருவரும் சண்டை போட்டுள்ளனர். அப்போது சச்சினுக்கு தெரிந்த அப்பு பிரசாந்த் என்பவர் வீட்டிலிருந்து வெளியே வந்து சண்டையை விலக்கிவிட்டுள்ளார். உடனே போதையில் இருந்த சோலை நிவாஸ், ‘உங்களை இன்று இரவு தூங்க விட மாட்டேன்’ என கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சோலை நிவாஸ் தனது நண்பர்களுடன் வந்து சோலை 3வது தெருவில் சண்டையை விலக்கி விட்ட அப்பு பிரசாந்த் குடிசைக்கு தீ வைத்துவிட்டு தப்பிவிட்டனர். தீ மளமளவென அருகில் உள்ள மற்ற குடிசைகளுக்கும் பரவி எரிய ஆரம்பித்தது. உடனடியாக வில்லிவாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ரகுபதி, அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் சுமார் 4 குடிசைகள் எரிந்து நாசமாயின. மாதவன் என்பவர் வசித்து வந்த குடிசை முழுவதும் எரிந்து பொருட்கள் நாசமாமாயின. அப்பு பிரசாந்த் இருந்த குடிசை வீடு லேசாக சேதம் அடைந்தது. மற்ற இரண்டு குடிசை வீடுகளில் ஆட்கள் யாரும் இல்லை. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குபதிவு செய்து சோலை 3வது தெருவை சேர்ந்த நிவாஸ் மற்றும் நண்பர்களான சிலம்பரசன் (20), கார்த்திக் (25), நவீன் (19), விஜயகுமார் (19) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post போதையில் குடிசைக்கு தீ வைப்பு: 5 பேர் கைது appeared first on Dinakaran.