பெய்ரூட்: லெபனான் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் கையடக்கப் பேஜர்கள் வெடித்ததில் ஹிஸ்புல்லா குழுவினர் உட்பட 8 பேர் பலியானார்கள். ஈரான் தூதர் உள்பட 2750 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால் இதுதரப்பினருக்கும் இடையே கடந்த 11 மாதங்களுக்கு மேல் போர் நீடித்து வருகிறது. இந்த போர் தற்போது லெபனான், சிரியா பகுதிகளுக்கும் பரவி உள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஹிஸ்புல்லா குழுவினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் படையும் சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழு மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த சூழலில் நேற்று திடீரென ஹிஸ்புல்லா போராளிகள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் மறைமுகமாக நடந்தது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவினர் வைத்திருந்த கையடக்க பேஜர்கள் நேற்று ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதே போல் பொதுமக்கள் வைத்திருந்த பேஜர்களும் வெடித்து சிதறியதால் லெபனான் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொது இடங்களில், வீடுகளில், மார்க்கெட்டுகளில் நின்று கொண்டு இருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. திடீரென பேஜனர்கள் வெடித்ததால் லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள சில ஹிஸ்புல்லா போராளிகளும் படுகாயம் அடைந்தனர்.
இதில் 8 பேர் பலியானார்கள். 2750 பேர் தீப்பற்றி எரிந்து படுகாயம் அடைந்தனர் என்று லெபனான் அதிகாரி தெரிவித்தார். ஹிஸ்புல்லா குழுவினர் வைத்திருந்த பேஜர்களை குறிவைத்து வெடிக்கச் செய்ததால், நவீன தொழில்நுட்பம் மூலம் இது இஸ்ரேல் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என்று லெபனான் அதிகாரி தெரிவித்தார். இந்த பயங்கர தாக்குதலில் லெபனானில் உள்ள ஈரான் தூதர் மொஜ்தபா அமானியும் படுகாயம் அடைந்தார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் பேஜர்கள் திடீரென வெடித்து சிதறியதால் மக்கள் படுகாயம் அடையும் காட்சிகள் வைரலாக பரவியது.
இந்த திடீர் தாக்குதலில் படுகாயம் அடைந்த பொது மக்களுக்கு கைகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. அவர்களில் பலர் அந்த பகுதியில் தரையில் உருண்டு கதறிய வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே லெபனானின் சுகாதார அமைச்சகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அவசர நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கும், பேஜர்களை வைத்திருக்கும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியது. அதைவிட முக்கியமாக வயர்லெஸ் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் சுகாதாரப் பணியாளர்களைக் கேட்டுக்கொண்டது.
பேஜர்களை வைத்து நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதல்களால் மருத்துவமனைகளில் உள்ள அவசர அறைகளில் நோயாளிகள் நிரம்பியுள்ளனர். அவர்களில் பலருக்கு கைகால்களில் காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன. தெற்கு லெபனான், கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், ஹிஸ்புல்லா குழுவினர் வலுவாக இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வகையான இரத்தத்தையும் தானம் செய்ய வரும்படி அந்த நாட்டு மக்களுக்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் லெபனான் மற்றும் சிரியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
* 1960 முதல் 2000 வரை 40 ஆண்டுகள் பேஜர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம் தகவல் தொடர்பு நடந்தது.
* செல்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பேஜர் தேவை குறைந்துவிட்டது.
* சில அவசரகால சேவைகள், குறிப்பிட்ட பொதுப் பாதுகாப்புப் பணியாளர்களால் தற்போதும் பேஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பேஜர்கள் வெடித்தது எப்படி?
* லெபனான் மற்றும் சிரியாவில் கையடக்க பேஜர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
* ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் எடுத்துச் சென்ற புதிய பேஜர்கள் தான் அதிகம் வெடித்து சிதறி உள்ளன. இதில் உள்ள லித்தியம் பேட்டரிகள் வெடித்ததாகத் தெரிகிறது.
* லித்தியம் பேட்டரிகள், அதிக வெப்பமடையும் போது வெடிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அதில் இருந்து புகை வரும், உருகலாம், தீப்பற்றி கூட எரிய வாய்ப்பு உள்ளது.
* ரீச்சார்ஜபிள் லித்தியம் பேட்டரிகள் செல்போன்கள், லேப்டாப்கள், மின்சார கார்கள் உள்ளிட்ட முக்கிய நுகர்வோர் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.
* லித்தியம் பேட்டரி தீ 590 டிகிரி செல்சியஸ்(1,100 பாரன்ஹீட்) வெப்பத்துடன் எரியும்.
* செல்போனும் வேண்டாம்: ஹிஸ்புல்லா தலைவர் எச்சரிக்கை
பேஜர்களை வெடிக்க வைத்து நடத்தப்பட்ட திடீர் தாக்குதலை தொடர்ந்து ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் செல்போன்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று தனது குழுவினருக்கு எச்சரித்தார். பேஜரை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது போல் இஸ்ரேல் படையினர் செல்போன்கள் மூலமும் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அவர்களை இலக்காக வைத்து தாக்குதல்களை நடத்த செல்போன்களை பயன்படுத்தலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
The post லெபனான், சிரியாவில் பெரும் பதற்றம் பேஜர்கள் வெடித்து 8 பேர் பலி: ஈரான் தூதர், 2750 பேர் படுகாயம்: ஹிஸ்புல்லா குழுவினரை குறி வைத்து தாக்குதல்; நவீன தொழில்நுட்பம் மூலம் இஸ்ரேல் நடத்தியதா? appeared first on Dinakaran.