வாலாஜாபாத்: பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்தை வாலாஜாபாத் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இப்பேரூராட்சியில் ஒன்றிய அலுவலகம், வங்கிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை மட்டுமின்றி வாலாஜாபாத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமின்றி வாலாஜாபாத்தில் செயல்படும் அரசு அலுவலகங்களில் தங்களின் பணிகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மேலும், வாலாஜாபாத்தை சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்த ஆயிரக்கணக்கானோர் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து காஞ்சிபுரம், பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், படப்பை, மறைமலைநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளின் பணிகளுக்காக செல்பவர்கள் அதிகம். இந்நிலையில், எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும் வாலாஜாபாத் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் தாம்பரம் செல்லும் மாநகர பேருந்தும், வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஒரகடம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதில், ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்நிலையில், பூந்தமல்லியில் இருந்து பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரை இயக்கப்படும் பேருந்தை வாலாஜாபாத் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக வாலாஜாபாத்தில் இருந்து ஒரகடம் வரை ஒரு பேருந்தில் சென்று ஒரகடத்தில் இருந்து பெரும்புதூர் வரை மற்றொரு பேருந்துமாக மாறி மாறி செல்கின்றனர்.
இதனால், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத சூழலும் நாள்தோறும் நிலவுகின்றன. இவை மட்டுமின்றி அரசு அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கு செல்லும் ஆசிரியர்களும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் வாலாஜாபாத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் வழியாக பூந்தமல்லி வரை மாநகர பேருந்து இயக்க வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே சுங்குவார்சத்திரம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்து வாலாஜாபாத் வரை நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட போக்குவரத்து துறை சுங்குவார்சத்திரம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்தை வாலாஜாபாத் வரை நீட்டித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை இயங்கும் மாநகர பேருந்தை வாலாஜாபாத் வரை நீட்டிக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.