×
Saravana Stores

கூடுதல் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியும் தாமதம்; நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை


நாகர்கோவில்: ஆண்டுக்கு ரூ.73 கோடிக்கு வருமானம் வரும், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்து வருவது பயணிகள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், வருமானத்தின் அடிப்படையில் என்.எஸ்.ஜி. 3 வகை ரயில் நிலையம் ஆகும். ஆண்டுக்கு ரூ.73 கோடி வருமானம் வருகிறது. ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் வருகிறார்கள். ஒருநாள் வருமானம் ரூ.20 லட்சம் ஆகும். திருவனந்தபுரம் கோட்டத்தில் குறைந்த அளவில் ரயில்களை இயக்கி அதிக வருவாய் ஈட்டும், ரயில் நிலையங்களில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 6 வது இடத்தில் உள்ளது.

நாகர்கோவில், கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களுக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வைத்து பிட்லைன் முதல் நிலை பராமரிப்பு, பிட் லைன் இரண்டாம் நிலை பராமரிப்பு, ரயில் பெட்டிகள் பழுதுபார்த்தல், ரயில்களை சுத்தம் செய்து தண்ணீர் பிடித்தல் என பல்வேறு கட்ட பணிகள் நடைபெறுகிறது. கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் நெடுந்தூர ரயில்களும் அங்கு பராமரிப்பு வசதி இல்லாத காரணத்தால் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு காலியாக கொண்டு வந்து இங்கு வந்து பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்திவைக்கவும், பராமரிப்பு செய்யவும் கூடுதல் வசதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தற்போது நான்கு நடைமேடைகள் உள்ளன. இதில் மூன்று நடைமேடைகள் திருநெல்வேலி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி என மூன்று மார்க்கமும் ரயில்களை இயக்க முடியும். நடைமேடை 1ஏ திருவனந்தபுரம் மார்க்கம் மட்டுமே உள்ள ரயில்களை கையாள முடியும். முனைய விரிவாக்க திட்டத்தின் கீழ் புதிதாக 625 மீட்டர் அதாவது 26 பெட்டிகள் கொண்ட புதிய நடைமேடைகள் (4. 5) இரண்டு அமைக்கப்பட இருக்கிறது. இந்த நடைமேடை தற்போது ஸ்டேபளிங் லைன்கள் உள்ள பகுதியில் அமைய உள்ளது. இந்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஸ்டேபளிங் லைன்கள் இதற்காக அகற்றப்பட்டன. அதன் பின்னர் பிளாட்பாரங்கள் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரயில்வே துறை இந்த பணிகளை துவங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. ரயில் நிலைய முனைய பணிகள், கிடப்பில் உள்ளதால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வர வேண்டிய புதிய ரயில்கள் தள்ளி கொண்டே போகிறது. இந்த பணிகள் ஓரளவு முடிந்தால் தான் புதிய ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பாக இருக்கும் என்று பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறி உள்ளனர். ஒரு சில ரயில்கள் அனுமதி அளிக்கப்பட்டு முனைய பிரச்னையால் இயக்க முடியாத நிலை உள்ளது. இந்தநிலை தொடர்ந்தால் இது போன்ற ரயில்கள் திருவனந்தபுரம் அல்லது திருநெல்வேலியுடன் நின்றுவிடும். குமரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் அல்லது திருநெல்வேலி சென்று அங்கிருந்து பயணம் செய்து அந்த ரயில் நிலைய வருவாய் அதிகரிக்க காரணமாகி விடும்.

எனவே நாகர்கோவில் ரயில் நிலைய முனைய விரிவாக்க பணிகளை வேகப்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் பயணிகள் ஏறும் வசதியுடன் கூடிய எஸ்கலேட்டர் மட்டும் அமைந்து இருந்தது. தற்போது இதில் இறங்கும் வசதிக்கான எஸ்கலேட்டர் அமைக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புதிதாக அமைய உள்ள 4, 5 வது பிளாட்பாரங்களுக்கு செல்வதற்காக எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

The post கூடுதல் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியும் தாமதம்; நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagercoil Railway ,Nagercoil ,Nagercoil Junction railway station ,Thiruvananthapuram Railway Division ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் அருகே ரயில் மோதி மூதாட்டி பலி