×
Saravana Stores

இரண்டு நாட்களாக காத்திருந்து 5 கூண்டு வைத்தும் சிக்காத சிறுத்தை

* சிறப்பு குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பு

* ‘எப்போ வேணா வரலாம்’ என எச்சரிக்கை

மேட்டூர் : மேட்டூர் அருகே நடமாடும் சிறுத்தையை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு நாட்களாக சிறுத்தை கூண்டில் சிக்காததால் ஆட்டை வனத்துறையினர் விடுவித்தனர். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் வனப்பகுதியில் உள்ளது புதுவேலமங்கலம் காப்பு நிலம். இந்தப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக, சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது.

ஆடு, கோழிகளை வேட்டையாட பகலிலேயே கிராமத்தில் நுழைந்தது. இரண்டு ஆடுகளை கடித்துக் குதறிய நிலையில், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் 70க்கும் மேற்பட்ட வன காவலர்கள், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் கண்காணித்து சிறுத்தை பதுங்கி உள்ள இடத்தை கண்டு பிடித்தனர்.

புதுவேலமங்கலம் கரட்டில் இருந்து, கருங்கரட்டிற்கு சிறுத்தை இடம் பெயர்ந்தது. கருங்கரட்டை சுற்றி வனத்துறையினர் விடிய விடிய ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறுத்தையை பிடிக்க கருங்கரட்டை சுற்றி 5 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டு ஆடுகளையும் ஒரு நாயும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக சிறுத்தை வெளியே வராமல் கருங்கரட்டிலேயே பதுங்கி உள்ளது. நேற்று காலை வனத்துறையினர் சிறுத்தை சிக்காததால் கூண்டுக்குள் இருந்த ஆடுகள் மற்றும் நாயை வெளியே கொண்டு வந்தனர். மாலையில் மீண்டும் கூண்டுக்குள் ஆடுகளை வைத்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக ட்ரோன் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதால், கிராம மக்கள் கருங்கரடு பகுதியில் கால்நடை மேய்க்கச் செல்ல வேண்டாம், மீனவர்கள் நான்கு மணிக்கு பிறகு அப்பகுதி காவிரியில் மீன் பிடிக்க செல்லக் கூடாது, கடந்த இரண்டு நாட்களாக சிறுத்தை வெளியே வராததால், உணவுக்காக ஆடு, கோழிகளை வேட்டையாட எப்போது வேண்டுமானாலும் வனப்பகுதியை விட்டு வெளியே வரும், இதனை கருத்தில் கொண்டு வனத்துறையினர் பகலில் வனப்பகுதியை சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கிராமமக்கள் வெளியே வரவேண்டாம் என்றனர்.

The post இரண்டு நாட்களாக காத்திருந்து 5 கூண்டு வைத்தும் சிக்காத சிறுத்தை appeared first on Dinakaran.

Tags : Vena ,Mettur ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு