×
Saravana Stores

தமிழகம் முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் `சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன்’

*ஏசி, பிரிட்ஜ் இருக்கும் வீட்டில் தான் குடியிருப்பேன்;

*கைதான புரோக்கர் தமிழ்ச்செல்வி பரபரப்பு வாக்குமூலம்

தாராபுரம் : தமிழகம் முழுவதும் 53 பேரை திருமணம் செய்ததாக கைது செய்யப்பட்ட சத்யாவின் தோழியும், புரோக்கருமான தமிழ்ச்செல்வியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், ஏசி, பிரிட்ஜ் இருக்கும் வீட்டில்தான் குடியிருப்பேன். சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன் என போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் சத்யா (34). இவர், கடந்த 8 மாதத்திற்கு முன்பு மேட்ரிமோனியல் மூலம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த் என்பவரை பழனியில் வைத்து திருமணம் செய்தார். தோழி மற்றும் புரோக்கராக கரூர் மாவட்டம் பள்ளபாளையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி (33) இருந்தார்.

திருமணத்தை பதிவு செய்ய முயன்றபோது சத்யாவுக்கு சென்னையை சேர்ந்த ஒருவருடன் ஏற்கனவே திருமணமானது தெரியவந்தது. இதனையடுத்து மகேஷ் அரவிந்த் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சத்யா ஈரோடு, சேலம், கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார், டாக்டர்கள், ஏற்கனவே திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாமல் பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் என சுமார் 53க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கல்யாண ராணி சத்யாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதன்பின், சத்யாவிற்கு மூளையாகவும், புரோக்கராகவும் செயல்பட்ட தமிழ்ச்செல்வியை போலீசார் தேடி வந்தனர். கடந்த 3 மாதமாக புதுச்சேரி, கேரளா, கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு போன்ற நகரங்களில் இந்த தேடுதல் வேட்டை நடந்தது.

இந்நிலையில், அவர் கரூரில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வியை கைது செய்தனர். பின்னர், அவரை தாராபுரத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி அவரை உடுமலை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, கைதான புரோக்கர் தமிழ்செல்வி போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு: எனக்கு சத்யாவுடன் நீண்ட நாள் பழக்கம் இல்லை. நான் சேலை வாங்கி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தேன். அதன் மூலம் சத்யா எனக்கு பழக்கம் ஆனார். தாராபுரம் உர வியாபாரி சுரேஷ்குமாரை சத்யா திருமணம் செய்ததில் எனக்கு தொடர்பு இருந்தது.

மற்ற பிரச்னைகளில் எந்த தொடர்பும் இல்லை. சாதாரணமாக நான் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள சேலையை தான் கட்டுவேன். எங்கு சென்றாலும் கால் டாக்சி புக் செய்துதான் செல்வேன். சாதாரணமாக பஸ்சில் பயணம் செய்வது கிடையாது. வாடகை வீட்டில் குடியிருந்தாலும் ஏசி, பிரிட்ஜ் இருக்கும் வீட்டில் தான் குடியிருப்பேன்.சேலை வாங்குவதற்காக சத்யா எண்ணை அழைத்தார். அந்த தொடர்பில் இருந்த போது நான் ஒருவரை காதலிக்கிறேன், எனக்கு உதவி செயுமாறு சத்யா கேட்டார்.

அதற்காக விலை உயர்ந்த சேலைகளை கொடுத்து சுரேஷ்குமாருடன் பழகுவதற்கு துணையாக இருந்தேன். சுரேஷ்குமார் திருமணம் பற்றி எனக்கு தெரியாது. சுரேஷ்குமாரை காதலிப்பதாக கூறியவுடன் அவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துமாறும், அவரையும் விட்டு விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுரை கூறினேன். சுரேஷ்குமாரை திருமணம் செய்து கொண்ட சத்யா அவரை மற்ற எல்லா திருமணத்தையும் போல் கழற்றி விட்டு விட்டார். அவர் கொடுத்த 12 பவுன் நகையை ஆட்டையை போட்டுள்ளார். இதுதான் சத்யாவுக்கும், எனக்கும் உள்ள தொடர்பு. எனக்கு டீ குடிக்கும் பழக்கம் இல்லை. சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகம் முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் `சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன்’ appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Satya ,Sathya ,Selvi ,
× RELATED முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பேற்பு