திருமயம், செப்.17: திருமயம் அருகே பேக்கரியில் சுமார் 7 கிலோ தடை செய்யப்பட்ட கூலிப் , ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சவேரியார்புரம் பகுதியில் பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூலிப், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக திருமயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேக்கரியில் திருமயம் எஸ் ஐ துரைமுருகன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விற்பனைக்காக வைத்திருந்த கூலிப் , ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. சுமார் 7 கிலோ தடை செய்யப்பட்ட கூலிப் , ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து காரைக்குடி பகுதியில் இருந்து புகையிலைப் பொருட்களை பேக்கரிக்கு விநியோகம் செய்ததாக சிவகங்கை மாவட்டம் செட்டியேந்தல் பகுதியை சேர்ந்த அரவிந்த் (23), கல்லல் மேலபூங்கொடி செந்தில்குமார் (47) ஆகியோரை திருமயம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்ற புகையிலைப் பொருட்கள் விநியோகம் செய்யும் முக்கிய நபர் குறித்து போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருமயம் அருகே பேக்கரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.