தக்கலை, செப்.17: தக்கலையில் திடீரென ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை 108 ஆம்புலன்ஸ் அலாரம் சீர் செய்தது. தக்கலையில் பஸ் நிலையம், பழையபஸ் நிலையம், மேட்டுக்கடை, அழகியமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்வது வழக்கம். இதனை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அவ்வப்போது கண்காணிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தக்கலை மேட்டுக்கடையில் போக்குவரத்து நெரிசல் திடீரென ஏற்பட்டது.
இப்பகுதி நான்கு ரோடு சந்திப்பு என்பதால் நான்கு பகுதிகளில் இருந்தும் வந்த வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்தி செல்ல முற்பட்டு ெநரிசலில் சிக்கி தவித்தன. அப்பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லை. இதனால் மெயின்ரோட்டில் 15 நிமிடம் கடும் நெரிசல் ஏற்பட்டு ஒரு புறம் பழைய பஸ் நிலையம் வரையிலும், மறுபுறம் மணலி வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்நிலையில் அவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் அலாரத்துடன் வந்து கொண்டிருந்தது. இந்த சத்தம் கேட்டதும் வாகன ஓட்டிகள் முந்தி செல்ல முற்படாமல் ஆம்புலன்ஸ்க்கு வழி கொடுக்கும் வகையில் தங்களது வாகனங்களை ஒதுக்கினர். 108 ஆம்புலன்ஸ்ம் சென்றது, போக்குவரத்து நெரிசலும் சீரானது.
The post தக்கலையில் திடீர் போக்குவரத்து நெரிசல்: சீர் செய்த ஆம்புலன்ஸ் appeared first on Dinakaran.