புனே: லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது. ஆவணங்கள் மேல் லஞ்சம் வைத்தால் அது வேகமாக நகரும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இவர் ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் வந்தவர். எனவே அரசு நடைமுறைகளையும், மோடி அரசையும் பற்றி பகிரங்கமாக பேசுவது அவரது வழக்கம். சமீபத்தில் கூட மக்களவை தேர்தல் முடிந்த பிறகு பிரதமராக விரும்பினால் எனக்கு ஆதரவு தருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஒன்றிய அரசில் லஞ்சம் கொடுத்தால் தான் அதிகாரிகள் வேலை செய்கிறார்கள். லஞ்சம் கொடுக்காவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது: அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது. லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. நமது அமைப்பில் ஏராளமான விஞ்ஞானி நியூட்டனின் தந்தையர்கள் சிலர் உள்ளனர். ஆவணங்கள் மேல் எடை (லஞ்சம்) வைத்தால் அது வேகமாக நகரும். எவ்வளவு பணம் லஞ்சமாக தரப்படுகிறதோ அதற்கு தகுந்தாற் போல் வேலை நடக்கிறது.
தற்போது உள்ள நடைமுறையில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும். பொறியாளர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுடன் பணியாற்ற வேண்டும். தேவையற்ற தாமதங்களைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அரசு துறைகளில் வெளிப்படைத்தன்மை, துரித முடிவு எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். உதாரணமாக எனது தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதமாவதற்கும், விபத்துக்கள் அதிகம் நடப்பது, உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணம் தவறுதலாக தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள்தான். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதில் கவனம் தயாரித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். திட்டங்கள் தாமதமாவதை குறைக்கலாம்.
ஒரு சில அதிகாரிகள் மேலதிகாரிகள் உத்தரவிட்டால்தான் தங்கள் வேலையை கூட செய்கிறார்கள். நெடுஞ்சாலையில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டிய அதிகாரி, தனக்குதான் யாரும் உத்தரவிடவில்லையே என்று நினைத்து சும்மா இருந்து விடுகிறார்கள். குழியை சரிசெய்ய வேண்டும் என்று உயரதிகாரி உத்தரவிட்ட பிறகுதான் பணியை செய்கிறார்கள். விதிப்படி உயர்அதிகாரி உத்தரவிட வேண்டும். சட்டப்படி சாலை குண்டும் குழியுமாக இல்லாமல் சமமாக இருக்க வேண்டியது அவசியது. இதனால், குழியை உயர் அதிகாரி உத்தரவிடாவிட்டாலும் சீர் செய்வது அதிகாரிகள் கடமை. ஆனால், அதை அதிகாரிகள் உணரவில்லை. அடல் சேது கடல் பாலம் அருகே முன்மொழியப்பட்ட 14 வழிச் சாலை, ரிங்ரோடு வழியாக புனேவை இணைக்கும் வகையில், மும்பை-புனே விரைவுச் சாலையில் போக்குவரத்து 50 சதவீதம் குறையும். மும்பை-புனே விரைவுச்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அடல் சேது அருகே 14 வழிச்சாலை அமைக்கப்படும். இது புனேவை ஒரு ரிங்ரோடு வழியாக இணைக்கும். பின்னர் பெங்களூருவை இணைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
* லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது.
* ஆவணங்கள் மேல் எடை (லஞ்சம்) வைத்தால் அது வேகமாக நகரும்.
* எவ்வளவு பணம் லஞ்சமாக தரப்படுகிறதோ அதற்கு தகுந்தாற் போல் வேலை நடக்கிறது.
The post அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு appeared first on Dinakaran.