×

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்

பொன்னேரி: மீஞ்சூரில் சுமார் 40 ஆண்டு காலமாக வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் பழுதடைந்த மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர் தேவிசுரெட்டி மேல்நிலைப்பள்ளி தெருவில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகம் கடந்த சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

தற்போது உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிகின்றனர். மேலும், இந்த அலுவலக ஊழியர்கள் மீஞ்சூர், மேலூர், வழுதி கைமேடு, சீமாவரம், கொரஞ்சூர் ரெட்டிபாளையம், புதுப்பேடு, மவுத்தம்பேடு, செப்பாக்கம், நாலூர், இளவம்பேடு, சிறுவாக்கம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு வழங்கி வருகின்றனர்.

40க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் மின் இணைப்பு கட்டணம் செலுத்த மாதம்தோறும் இங்கு வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் நின்றிருந்த பெண் மீது சிலாப் பெயர்ந்து தலையில் விழுந்து அடிபட்டு பரபரப்பு நிலவியது.  இதனைத்தொடர்ந்து, உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், தண்டையார்பேட்டை மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, புதிய கட்டிடம் அல்லது வேறு இடதிற்கு மின்வாரிய அலுவலகத்தை மாற்றும்படி கோரிக்கை வைத்ததன்பேரில், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், கோயில் நிர்வாக அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பலர் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் அல்லது மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆலோசனை நடத்தினர். இக்கட்டிடம் இடிந்து விழுந்து உயிர்ச் சேதம் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Power Board ,Ponneri ,Devisureddy High School Street ,Meenjur ,
× RELATED கடையநல்லூரில் நாளை மின்தடை