×
Saravana Stores

தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை

சென்னை: செங்கல்பட்டு பரனூர், திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடிகள் கண்ணாடிகள் அடித்து நொற்று சூறையாடப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், ஆண்டுதோறும் இருமுறை கட்டண உயர்வை கைவிட வேண்டும், புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆகிய 7 சுங்கச்சாவடிகளை ஒரே நேரத்தில் முற்றுகையிடும் போராட்டம் நேற்று மாலை நடந்தது.

செங்கல்பட்டு: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் ஜவாஹருல்லா கலந்துகொண்டார். தலைமை பிரதிநிதி ஷாஜகான், மாநில துணை பொதுச்செயலாளர் யாகூப், மாவட்ட தலைவர் முகமது ரபிக், மாவட்ட செயலாளர் முகமது யூனிஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். சில நிர்வாகிகள் பரனூர் சுங்கச்சாவடியின்‌ கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் 2 பேரை கைது செய்து வேனில் ஏற்றியதால் பற்றம் நிலவியது. பின்பு நிர்வாகிகள் அனைவரும் ஒன்று திரண்டு போலீஸ் வேனை முற்றுகையிட்டு கைது செய்த இருவரையும் விடுவிக்க வேண்டும் என கோஷமிட்டனர். செங்கல்பட்டு டிஎஸ்பி புகழ் தலைமையிலான போலீசார் இருவரையும் விடுவித்தனர். இதனால் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது. இதைதொடர்ந்து மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் ஒன்றிய அரசு சார்பில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வரி வசூலிக்கப்படுகிறது.

பல இடங்களில் காலாவதியான சுங்கச்சாவடிகள் தொடர்ந்து செயல்படுகிறது என இந்திய அரசின் தலைமை கணக்காயர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1956க்கு முன்பு கட்டப்பட்ட பாலங்களுக்கெல்லாம் தற்போது வரி வசூல் செய்யப்படுகிறது. இது பகல் கொள்ளை. தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றார். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை திருச்சி மாவட்ட செயலாளரும், மணப்பாறை எம்எல்ஏவுமான அப்துல் சமது தலைமையில் கட்சியினர் நேற்று மாலை 5 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 மணி வரை நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென 2 பக்கமும் இருந்த சிசிடிவி கேமரா கண்ணாடி கூடங்கள், வழிவிடும் எல்இடி தடுப்புகள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2 வசூல் மையங்கள் சூறையாடப்பட்டதால் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் சங்க சாவடி முற்றுகை போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.முன்னதாக போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேனில் வந்தவர்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிப்பட்டதால் சுங்கசாவடியை அடித்து நொறுக்க போவதாக கட்சியினர் கூறியதால் போலீசார் சமரசம் செய்து அந்த சுங்க கட்டணத்தை திரும்ப பெற்று கொடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் பெங்களூரு- சென்னை செல்லும் வழியில் உள்ள 5 கான்வாய்களில் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், அங்குள்ள 10வது பூத்தை கைகளால் தாக்கியதில் கண்ணாடி உடைந்தது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 500க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பூத் கண்ணாடி உடைப்பு தொடர்பாக மமகவினர் 20 பேர் மீது பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

The post தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை appeared first on Dinakaran.

Tags : Paranur ,Duvakkudi ,Mamak ,Tamil Nadu ,Chennai ,Chengalpattu ,Baranur ,Trichy Duvakkudi ,Humanity People's Party ,Mamaka ,
× RELATED தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள்...