×
Saravana Stores

முகூர்த்தநாளான நேற்று ஒரேநாளில் 6 சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு: கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல்

சென்னை: முகூர்த்தநாளான நேற்று ஒரே நாளில் 6 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் லட்சக்கணக்கில் ரொக்கப்பணம் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று முகூர்த்தநாள் என்பதில் அதிகளவில் பத்திரப்பதிவு நடந்தது. இதில் முறைகேடு நடப்பதாக புகார் வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர்.
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென கார் ஒன்றில் வந்து இறங்கிய திருவள்ளுர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராமசந்திர மூர்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர், அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகம் எதிரில் ஆவண எழுத்தர் ஒருவர் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.30,000ஐ அலுவலக மதில் சுவர் மீது வீசி எறிந்தார். அதை அதிகாரிகள் கைப்பற்றினர். அங்குள்ள அரசு அலுவகங்களின் அருகிலும் அவர்கள் சோதனையிட்டனர். பத்திரப்பதிவு செய்ய வந்த ஒருவர் வைத்திருந்த ரூ.1.30 லட்சத்தையும் பறிமுதல் செய்து ஆவணங்கள் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். இங்கு ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. தொழிற்சாலைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஒரு மாதத்தில் மட்டும் 500 முதல் 1000 பத்திரப்பதிவுகள் செய்யப்படுகிறது. இங்கு பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக அலுவலகத்தில் நுழைந்து கதவுகளை மூடிக் கொண்டனர். தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் புரோக்கர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு துணை அலுவலராக விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் 2 வருடமாக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெற்று பத்திரப்பதிவு செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் கூடுதலாக 100 டோக்கன் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த சமயத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள், பத்திரப்பதிவு எழுத்தர் மற்றும் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் ரொக்கப்பணத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதுபோன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில் ஆயிரக்கணக்கிரல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சார் பதிவாளர் முத்துஅழகேசன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி வரை சோதனை நீடித்தது. இதில் கணக்கில் வராத கணக்கில் வராத ரூ.75 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்திகணக்கில் வராத ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மொத்தம் 6 சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 12 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post முகூர்த்தநாளான நேற்று ஒரேநாளில் 6 சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு: கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mukurth ,CHENNAI ,Mukurtha ,Mukurthana ,Tamil Nadu ,
× RELATED சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்றவர் கைது