×
Saravana Stores

ராகுல் மீது மறைமுக தாக்கு; வெறுப்புணர்வு கொண்டவர்கள் இந்தியாவை அவமதிக்கின்றனர்: பிரதமர் மோடி பேச்சு

அகமதாபாத்: ‘வெறுப்பு மற்றும் எதிர்மறை உணர்வுகளைக் கொண்ட சிலர் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் அழிக்க துணிகிறார்கள், தேசத்தை அவமதிக்கிறார்கள்’ என ராகுலை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கி பேசி உள்ளார். பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது சொந்த மாநிலமாக குஜராத்திற்கு நேற்று வந்தார். அகமதாபாத்தில் அவர் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், நாட்டின் முதல் நமோ பாரத் விரைவு ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புஜ் முதல் அகமதாபாத் வரை இயக்கப்படும். மேலும், 5 வந்தே பாரத் ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒவ்வொரு இந்தியனும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பாடுபடும் போது, சில எதிர்மறை எண்ணங்கள் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அழிக்க நினைக்கின்றன. அவர்கள் நாட்டைப் பிரிக்க விரும்புகிறார்கள். வெறுப்புணர்வு கொண்ட சிலர் இந்தியாவையும் குஜராத்தையும் அவமதிக்க எந்த வாய்ப்பையும் விட்டு வைப்பதில்லை. திருப்திப்படுத்தும் அரசியலுக்காக அவர்கள் (எதிர்க்கட்சிகள்) எந்த எல்லையையும் தாண்டுவார்கள். எனது 3வது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களிலும் என்னை அவர்கள் அவமானப்படுத்தினார்கள். கேலி செய்தார்கள். கிண்டல் செய்தார்கள்.

ஆனாலும் இந்த காலகட்டத்தில் அரசின் வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே நான் ஒருமனதாக கவனம் செலுத்தினேன். எனது மவுனம் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கும். நான் வாழ்ந்தால் உங்களுக்காக வாழ்வேன். போராடினால் உங்களுக்காக போராடுவேன். என்னை தியாகம் செய்தால் உங்களுக்காகவே தியாகம் செய்வேன். மக்களுக்காக என்னை தியாகம் செய்ய முடிவு செய்து விட்டேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவரது சமீபத்திய அமெரிக்க பயணத்தில் பேசிய கருத்துகளுக்காக பாஜவின் பல்வேறு தலைவர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். தற்போது பிரதமர் மோடி மறைமுகமாக ராகுலை விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ராகுல் மீது மறைமுக தாக்கு; வெறுப்புணர்வு கொண்டவர்கள் இந்தியாவை அவமதிக்கின்றனர்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rahul ,PM Modi ,AHMEDABAD ,Modi ,India ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்டில் விமான கோளாறு காரணமாக 2...