×

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பைனலுக்கு முன்னேறியது இந்தியா

ஹூலுன்பியர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்திய இந்தியா, இறுதிப் போட்டியில் இன்று சீனாவுடன் மோதுகிறது. லீக் சுற்றில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவு செய்து அசத்திய இந்தியா, அரையிறுதியில் நேற்று கொரியாவை சந்தித்தது. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி கொரிய கோல் பகுதியை முற்றுகையிட்ட இந்திய அணிக்கு உத்தம் சிங் 13வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 19வது மற்றும் 45வது நிமிடத்திலும், ஜர்மன்பிரீத் சிங் 32வது நிமிடத்திலும் கோல் போட்டு அசத்தினர்.

கொரியா தரப்பில் 33வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் யாங் ஜிஹுன் ஆறுதல் கோல் போட்டார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்தியா பைனலுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் – சீனா இடையே நடந்த மற்றொரு அரையிறுதி 1-1 என டிராவில் முடிந்ததை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் சீனா 2-0 என வெற்றியை வசப்படுத்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடைபெறும் பைனலில் இந்தியா – சீனா அணிகள் மோதுகின்றன. 3வது இடத்துக்கான போட்டியில் கொரியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பைனலுக்கு முன்னேறியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : Asian Champions Trophy Hockey ,India ,Hulunbier ,Korea ,China ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு