சென்னை: தமிழகத்தில் இன்று இயல்பை விட வெயில் கொளுத்தும் என்றும், அதேநேரம் வரும் 21ம்தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே மாநிலம் முழுக்க நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பமும் கூட கணிசமாகக் குறைந்தது. ஆனாலும் தற்போது ஆங்காங்கே மழை பெய்தாலும் கூட வறண்ட வானிலையும் கூடிக் கொண்டிருக்கிறது. இதனால் வெப்பமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடைகாலம் மீண்டும் திரும்பியது போல வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
எனவே, வரும் 21ம்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டாலும், தமிழகத்தில் இன்று 5 டிகிரி பாரன் ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழகத்தில் இன்று 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோன்று . சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல் ஆகிய பகுதிகளில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று காற்று வீசக்கூடும் என்றும் நாளை முதல் செப்டம்பர் 18ம்தேதி வரை 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.