×
Saravana Stores

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை விலை உயர்வு

*விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு : ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் சொசைட்டிகளில் கொப்பரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட விளைப்பொருள்களில் முக்கிய இடம் பிடித்திருப்பது தேங்காய். தற்போது மாவட்ட அளவில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதேநேரம், வட மாநிலங்களில் தேங்காயின் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், கொப்பரை தேங்காய் எண்ணெய் உற்பத்தி, மருத்துவ பயன்பாட்டுக்கு தேங்காயின் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரம் தேங்காயை கொப்பரையாக உலர வைத்து தகுந்த பதத்துடன் விற்பனை செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக விவசாயிகள் கொப்பரை உற்பத்தியை விட நேரடி தேங்காயாக விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கொப்பரை உற்பத்தி அவ்வப்போது பாதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை கூட்டுறவு விற்பனை கூடங்கள் மற்றும் சொசைட்டிகளில் கொப்பரை விலை, ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கொப்பரை விலை கிலோ ரூ.85 முதல் ரூ.93 வரை இருந்தது. இது கடந்த மாதம் ரூ.100ஐ கடந்து விற்பனையானது. இந்நிலையில் நாபெட் (நேஷனல் அக்ரிகல்சுரல் கோ ஆபரேடிவ் மார்க்கெட்டிங் ஃபெடரேசன் ஆப் இந்தியா) சார்பில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அரவை கொப்பரை ஒரு கிலோ ரூ.116.60க்கும், பந்து கொப்பரை ரூ.120க்கும் கொள்முதல் செய்தது இதனால் தரமான கொப்பரை வைத்திருந்த உற்பத்தியாளர்கள் நாபெட் மூலமாக தங்களது கொப்பரையை விற்பனை செய்தனர். இதனால் தற்போது அரவை கொப்பரை 88,300 டன், பந்து கொப்பரை 2,000 டன் நாபெட் கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் சொசைட்டிகளில் கூடுதல் விலைக்கு கொப்பரை விற்பனையானது.
இது குறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: தற்போது தேங்காயின் தேவை அதிகரித்துள்ளதால் கொப்பரை தேங்காய் உற்பத்தி குறைகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4,500 மூட்டை வரை கொப்பரை வரத்தானது. அதுவே இந்த வாரம் 2,900 மூட்டைகள் எனும் அளவிலேயே வரத்தாகியுள்ளது.

இதேபோல, அவல்பூந்துறை, எழுமாத்தூர், வெள்ளகோவில், காங்கயம் போன்ற இடங்களிலும் தேங்காய் வரத்து குறைந்துள்ளது. அதே நேரம் விலை உயர்ந்துள்ளது.
தற்போது தீபாவளி பண்டிகையும் நெருங்கி வர உள்ளதால் தேங்காய் எண்ணெயின் தேவை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள், எண்ணெய் நிறுவனங்கள் கொப்பரையை அதிகம் கொள்முதல் செய்கின்றனர். இதனால் கொப்பரை விலையும் உயர தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் நிலவரப்படி ஒழுங்குமுறை கூட்டுறவு விற்பனை கூடங்கள் மற்றும் சொசைட்டிகளில் ஒரு கிலோ கொப்பரை ரூ.96.69 முதல் ரூ.118.10 வரையிலும், காங்கயத்தில் ரூ.120 வரையிலும் விலை உயர்ந்து விற்பனையானது. இது கொப்பரை உற்பத்தியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Dinakaran ,
× RELATED கோபி அருகே இலவச பட்டா நிலத்தை...