×
Saravana Stores

இலங்கை அரசு அட்டூழியம் ராமேஸ்வரத்தில் செப்.20ல் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்களை கடல் எல்லையில் கைது செய்து துன்புறுத்துவதை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். படகுகளை சுற்றி வளைத்து அச்சுறுத்துவது, நாட்டுப் படகுகளையும் கூட கைப்பற்றி வழக்குப் போடுவது, மீனவர்களை கைது செய்து துன்புறுத்துவது, நடுக்கடலில் மோதலுக்கு முயல்வது என பல வகையான முயற்சிகளை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது செய்து வருகின்றனர்.

இவ்வாறான சமயங்களில் இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்து உரிய எச்சரிக்கை, கண்டனக் குரல்கள் எழ வேண்டுமென பலமுறை வற்புறுத்தியுள்ளோம். ஆனால், மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை, மீனவர்களின் பிரச்னையை புறக்கணிப்பதாகவே இருந்து வருகிறது. ராஜதந்திர அடிப்படையிலான தலையீடுகள் இல்லாததால் மீனவர்கள் துன்புறுத்தப்படுவதும், பொருட்சேதத்திற்கு ஆளாவதும் தொடர்கதையாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான் அண்மையில் கைது செய்த தமிழ்நாட்டு மீனவர்கள் சேது, அடைக்கலம், கணேசன் ஆகியோரின் மீது வழக்குப் போட்டுள்ள இலங்கை அரசாங்கம், அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்ததுடன், அதனை செலுத்தவில்லை என்று கூறி மொட்டையடித்து, கைதிகள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து அவமதித்துள்ளனர்.

தமிழ்நாட்டு மீனவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் இலங்கை கடற்படையினரின் இந்த இழிவான அராஜகப் போக்கினை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை அரசையும், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையில் பாராமுகமாக உள்ள மோடி அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் வரும் செப் 20ம் தேதி ராமேஸ்வரத்தில், கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

The post இலங்கை அரசு அட்டூழியம் ராமேஸ்வரத்தில் செப்.20ல் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Government Atrocities Marxist Demonstration in Rameswaram ,Chennai ,Marxist ,Communist ,K. Balakrishnan ,Sri Lankan Navy ,Tamil Nadu ,Sri Lankan Government Atrocities Marxist Demonstration ,Rameswaram ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் 24 மணி நேரம் மருத்துவ...