×
Saravana Stores

கேரளாவில் 23 வயது மாணவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது!

கேரளா: மலப்புரத்தில் 23 வயது மாணவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு நிபா வைரஸ் உறுதியானது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார். புனே வைராலஜி ஆய்வகத்திற்கு உயிரிழந்தவரின் மாதிரி அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் நிபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கேரளாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த இளைஞருக்கு மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது உறுதியானதையடுத்து மருத்துவ அதிகாரி நடத்திய விசாரணையில் நிபா வைரஸ் பாதிப்பு சந்தேகிக்கப்பட்டது. உடனடியாக கிடைக்கப்பெற்ற மாதிரிகள் மாவட்ட மருத்துவ அதிகாரி மூலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன.

இந்த சோதனை முடிவு நேர்மறையானது. இது தெரிந்தவுடன் நேற்று இரவு சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. நெறிமுறைப்படி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தினார். நெறிமுறைப்படி நேற்று 16 குழுக்கள் அமைக்கப்பட்டன. இது தவிர, மாதிரிகள் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. இதில் நிபா பாதிப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 151 பேர் முதன்மை தொடர்பு பட்டியலில் உள்ளனர். இளைஞர் 4 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இளைஞருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் அனைவரின் தகவல்களும் சேகரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட 5 பேருக்கு லேசான அறிகுறிகள் தோன்றியதை அடுத்து, மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

The post கேரளாவில் 23 வயது மாணவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Health Minister ,Veena George ,Malappuram ,Pune Virology Laboratory ,
× RELATED வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக...