- உதயநிதி ஸ்டாலின்
- சீதாராம் யெச்சூரி
- புது தில்லி
- பொதுச் செயலாளர்
- பொதுவுடைமைக்கட்சி
- of
- இந்தியா
- எய்ம்ஸ் மருத்துவமனை
- தில்லி
- எய்ம்ஸ்
புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாசப் பிரச்னை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக அவரது உடலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது உடல் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலிக்காக முதல் நாளான நேற்று முன்தினம் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், டெல்லிக்கான தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோன்று, முன்னதாக திமுக எம்பி கனிமொழி மற்றும் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், மதுரை எம்பி வெங்கடேசன் ஆகியோரும் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு திமுக கட்சி சார்பாகவும், தமிழ்நாடு முதல்வர் சார்பாகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவரது மறைவு நாட்டுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். இதுபோன்ற இக்கட்டான சூழலில் அவர்களுக்கும், சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். இதை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த சீதாராம் யெச்சூரியின் உடல் வேனில் ஏற்றப்பட்டு அங்கிருந்து ஜந்தர் மந்தர் பகுதியில் இருக்கும் கேரளா பவன் வரையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் சீதாராம் யெச்சூரியின் உடல் அவரது குடும்பத்தாரின் விருப்பத்தின்படி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
The post சீதாராம் யெச்சூரி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி: நாட்டுக்கே இழப்பு என்று உருக்கம் appeared first on Dinakaran.