திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த சாப்பாட்டு போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கஞ்சிக்கோடு கொல்லப்புரா என்ற இடத்தில் ஒரு இளைஞர் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் சார்பில் நேற்று ஓணம் விழா நடத்தப்பட்டது. இதையொட்டி கயிறு இழுக்கும் போட்டி, சாப்பாட்டு போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாப்பாட்டு போட்டியில் அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (50) என்ற டிப்பர் லாரி டிரைவரும் கலந்து கொண்டார். குறிப்பிட்ட நேரத்தில் அதிக இட்லி சாப்பிடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டது. போட்டி தொடங்கியவுடன் அனைவரும் இட்லியை வேக வேகமாக சாப்பிடத் தொடங்கினர். அப்போது சுரேஷின் தொண்டையில் இட்லி சிக்கிக் கொண்டது. இதில் மூச்சுச் திணறி அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை வாளையாரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
The post ஓணம் சாப்பாட்டு போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி டிரைவர் பலி appeared first on Dinakaran.