திருத்தணி, செப். 14: திருத்தணியில் அடுக்குமாடி வீட்டின் வாசலில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் அவர்களின் தாய் உயிரிழந்த நிலையில் 8 நாட்கள் உயிருக்கு போராடி வந்த தந்தையும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பா நகரில் மகேந்திரன் என்பரின் வீட்டில் திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு காலனியைச் சேர்ந்த பிரேம்குமார்(32), அவரது மனைவி நிர்மலா, அவர்களின் 2 ஆண் குழந்தைகள் மாடி வீட்டில் முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி நள்ளிரவு அடுக்குமாடி குடியிருப்பின் வாசல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த 3 பைக்குகள் மர்மமான முறையில் தீப்பற்றிக்கொண்டதில் இருசக்கர வாகனங்களில் பேட்ரோல் டேங்குகள் வெடித்து வீட்டினுள் தீ பரவியது.
கரும்புகை சூழ்ந்து கொண்டதில் மூச்சு திணறல் ஏற்பட்டதால், கை குழந்தைகளை காப்பாற்ற வீட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற பிரேம் குமார், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் தீயில் சிக்கி பலத்த காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளும், அவர்களின் தாயும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்நிலையில், சென்னை கேஎம்சி மருத்துவமனையில் 8 நாட்களாக உயிருக்கு போராடி வந்த பிரேம்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார். தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி 2 குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், மின் வாரிய அதிகாரி முழு ஆய்வுக்கு பிறகு மின் கசிவால் தீ விபத்து ஏற்படவில்லை என்று திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் போலீசாருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
The post திருத்தணி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு: மொத்த குடும்பமும் உயிரிழந்த பரிதாபம் appeared first on Dinakaran.