×

நீதிபதிக்கு வாட்ஸ்அப்பில் மனுதாரர் கடிதம் எழுதிய விவகாரம் நீதிபதி, வழக்கறிஞர் விசாரணையில் இருந்து விலகல் : வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை

சென்னை: வழக்கு சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல், வாட்ஸ் அப்பில் மனுதாரர் கடிதம் அனுப்பியதால் நீதிபதி, வழக்கறிஞர் விசாரணையில் இருந்து விலகினர். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற விக்னேஷ்வரன் என்பவர் சான்று சரிபார்ப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு மின்னஞ்சல் மற்றும் அவரது மொபைல் எண் வாட்ஸ் அப்புக்கும் மனுதாரர் விக்னேஷ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி இந்த தகவலை தெரிவித்தார். அப்போது வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, நீதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பியது குறித்து மனுதாரர் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தின் கண்ணியத்தை பேணுவதற்காக, வழக்கில் ஆஜராவதில் இருந்து விலகிக்கொள்கிறேன்என தெரிவித்தார். இதையடுத்து, தனக்கு நேரடியாக கடிதம் எழுதியது நீதி பரிபாலனத்தில் தலையிடுவதைப் போல உள்ளதாக கூறிய நீதிபதி, நம்பிக்கை இழந்த நிலையில் இதுபோல கடிதம் எழுதியிருக்க கூடும் என்பதால் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை. வழக்கை தொடர்ந்து விசாரிக்க விரும்பவில்லை. எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

The post நீதிபதிக்கு வாட்ஸ்அப்பில் மனுதாரர் கடிதம் எழுதிய விவகாரம் நீதிபதி, வழக்கறிஞர் விசாரணையில் இருந்து விலகல் : வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Watts Up ,Vigneshwaran ,DNBSC Group ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!