நாகர்கோவில், செப்.14: நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் (52). தனியார் துறைமுகத்தில் லோடுமேனாக உள்ளார். இவரது உறவினர் ஒருவர் பாம்பன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்ப்பதற்காக ரவீந்திரன் சென்ற போது, மேல பெருவிளையை சேர்ந்த செல்வன் ஜெபராஜ் என்ற கொக்கி செல்வன் (39) என்பவர் வழி மறித்து மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் ரவீந்திரன் பணம் இல்லை என கூறி உள்ளார். இதையடுத்து ரவீந்திரனை தாக்கி விட்டு, சென்றார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஆசாரிபள்ளத்தில் உள்ள மதுக்கடை பாரில் வைத்து மீண்டும் ரவீந்திரன், செல்வன் ஜெபராஜிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வன் ஜெபராஜ் அங்கிருந்த கடப்பா கல்லில் ரவீந்திரனின் தலையை மோதியுள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார். மேலும் அங்கிருந்த பீர் பாட்டிலாலும் ரவீந்திரனை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரவீந்திரன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு புகுந்து, செல்வன் ஜெபராஜ் மிரட்டியுள்ளார்.இது குறித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்வன் ஜெபராஜ் மீது, ஏற்கனவே வழக்குகள் உள்ளன. போலீஸ் ரவுடி பட்டியலிலும் அவர் உள்ளார் என கூறப்படுகிறது.
The post நாகர்கோவில் அருகே துறைமுக ஊழியர் மீது சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.