சேலம்: சேலம் சுற்று வட்டார பகுதிகளில் அரளி பூ அதிக விளைச்சலால் உரிய விலை கிடைக்கவில்லை என்று பூ விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, எருமாபாளையம், வலசையூர், மன்னார்பாளையம், மல்லூர் உள்பட பல பகுதிகளில் அரளி பூச்செடிகள் அதிகளவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சிலநாட்களாக அரளி பூ விளைச்சலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதேவேளையில் கோயில் திருவிழாக்கள் இல்லாததால் அரளி பூவின் தேவையும் குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒருவாரமாக அரளி பூவின் விலை சரிந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து அரளி பூ விவசாயிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் அரளி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் அரளி பூவை சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட் மற்றும் பல மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக அரளி பூ விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் விளைச்சலுக்கு ஏற்ப விற்பனை இல்லை. தற்போது கோயில் திருவிழாக்கள் மற்றும் முகூர்த்தம் இல்லாததால் அரளி பூவின் தேவை குறைந்துள்ளது. இதனால் அதன் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
ஒரு கிலோ அரளி ₹30க்கு விற்பனை செய்யப்படுகிறது. எங்களிடம் வாங்கிச்செல்லும் வியாபாரிகள் ₹80 முதல் ₹100 வரை விற்பனை செய்கின்றனர். அரளிக்கு உரிய விலை கிடைக்காததால் சில நேரங்களில் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகிறோம். அரளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
The post அதிக விளைச்சலால் அரளி பூ விலை சரிவு: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.