×
Saravana Stores

2021ம் ஆண்டு திட்டப்படி இதுவரை 7,69,849 மனுக்கள் பெறப்பட்டு 7,12,679 மனுதாரர்களுக்கு பட்டா மாறுதல்: இணைய வழியில் துரித நடவடிக்கை

சென்னை: தமிழக அரசு 2021ல் கொண்டு வந்த திட்டப்படி இதுவரை 7,69,849 மனுக்கள் பெறப்பட்டதில் 7,12,679 மனுதாரர்களுக்கு இணையவழியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் இணையவழி பட்டா மாறுதல் சேவையில் வீடு மனை வாங்குவோர் பட்டா பெயர் மாற்றம் கோரி அளித்துள்ள விண்ணப்பங்கள், சரிபார்ப்பு பணிகள் முடிந்தும் அதிகாரிகளின் இறுதி முடிவுக்காக 3 மாதங்களுக்கு மேல் காத்திருப்பதாக மக்கள் புகார் என வெளியிடப்பட்ட செய்தி குறித்த வருவாய்த் துறையின் அறிக்கை:
இணையவழி பட்டா மாறுதல் உட்பிரிவு அல்லாத இனங்களில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கடந்த 8ம் தேதி வரை பெறப்பட்ட 16,41,019 மனுக்களில், 15,65,085 மனுக்கள் முடிவு செய்யப்பட்டு, இன்றைய நிலையில் 75,934 மனுக்கள் நிலுவையில் உள்ளன, இவற்றில் 83 மனுக்கள் மட்டுமே 3 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ளன. இணையவழி பட்டா மாறுதல் உட்பிரிவு இனங்களில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கடந்த 8ம் தேதி வரை வரப்பெற்ற 14,02,160 மனுக்களில், 12,02,305 மனுக்கள் முடிவு செய்யப்பட்டு, இன்றைய நிலையில் 1,99,855 மனுக்கள் நிலுவையில் உள்ளன, இவற்றில் 1907 மனுக்கள் மட்டுமே 3 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்களுடன் அரசு முதன்மை செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நில நிர்வாக ஆணையர் மற்றும் இயக்குநர், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டம் ஆகியோரால் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அக்கூட்டத்தில் இணைய வழி பட்டா மாறுதல் உட்பிரிவு அல்லாத இனங்களுக்கான மனுக்கள் மீது 15 தினங்களுக்குள்ளும், இணைய வழி பட்டா மாறுதல் உட்பிரிவு மனுக்கள் மீது 30 நாட்களுக்குள்ளும், நடவடிக்கை மேற்கொண்டு முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாதந்தோறும் அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது, மனுக்களை விரைந்து முடிக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இணைய வழி பட்டா மாறுதலில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமைப்படுத்தவும், பட்டா மாறுதல் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், உயர்மட்ட அலுவலர்களைக் கொண்ட simplification committee பரிந்துரைகளின் அடிப்படையில் இணைய வழி பட்டா மாறுதல் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற பகுதிகளில் இணைய வழி பட்டா மாறுதல் உட்பிரிவு அல்லாத இனங்களில் நகர சார் ஆய்வாளர் தணிக்கை மேற்கொண்டு இணையவழியாக சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் அடுத்த நிலையில் வட்ட ஆவண வரைவாளர் மூலமாக பரிசீலனை செய்யப்பட்டு துணை வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டு வந்த நடைமுறையினை மாற்றி வட்ட ஆவண வரைவாளரின் நிலையினை நீக்கம் செய்து நேரிடையாக துணை வட்டாட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நடைமுறையை பின்பற்றி உடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இணைய வழி பட்டா மாறுதல் உட்பிரிவு அல்லாத இனங்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவர்களால் தணிக்கை மேற்கொண்டு பரிந்துரை செய்யப்படும் மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படக்கூடிய மண்டல துணை வட்டாட்சியர்களிடம் மனுக்கள் அதிகமாக செல்வதினால் ஏற்படும் நடைமுறை காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, தலைமையிடத்து துணை வட்டாட்சியருக்கும் இக்கோப்புகளை அங்கீகரிக்கும் பணி பகிர்மான உத்தரவு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதன்படி கோப்புகளை உடன் அங்கீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் தானியங்கி முறையில் கிரையம் பெற்ற நபர் மீது பட்டா மாறுதல் உட்பிரிவு அல்லாத இனங்கள் உடன் மேற்கொள்ளும் நடைமுறை 2021 பிப்ரவரி 23ம் தேதி கொண்டு வரப்பட்டு இதுவரை 7,69,849 மனுக்கள் பெறப்பட்டு, 7,12,679 மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்பட்டு மனுதாரர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இணையவழி பட்டா மாறுதலில் துரித நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களின் மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 2021ம் ஆண்டு திட்டப்படி இதுவரை 7,69,849 மனுக்கள் பெறப்பட்டு 7,12,679 மனுதாரர்களுக்கு பட்டா மாறுதல்: இணைய வழியில் துரித நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கல்வி நிறுவனங்களில் போதைபொருள்...