சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடைபெறவுள்ளதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை (செப். 14) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த தேர்வினை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில், 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் எழுத உள்ளனர். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர், 20 தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் காலை9 மணிக்கு முன்னரே தேர்வு மையத்திற்கு சென்றுவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 09.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடைபெறவுள்ளதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை (செப். 14) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024-25ம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியில் திருத்தம் வெளியிடப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. நாளை (14.09.2024) சனிக்கிழமை அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. தங்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இவ்விவரத்தினை தெரிவித்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடைபெறவுள்ளதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.