சேலம்: திருச்சி சிறையில் திருநங்கை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில், சேலம் சிறையில் வார்டனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநங்கை ஒருவரை, இரவு பணியில் இருந்த வார்டன் மாரீஸ்வரன் என்பவர், கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த திருநங்கை, ஜாமீனில் வெளியே சென்று, சட்டஉதவி மையத்தின் மூலம் சிறையில் கொடுமை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக நடந்த விசாரணையில், திருநங்கை வைக்கப்பட்டிருந்த அறையின் சிசிடிவி கேமரா ஆய்வு செய்யப்பட்டது. இதில் வார்டன் மாரீஸ்வரன், திருநங்கை அறைக்கு வந்துசெல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இதனை மறைக்கும் முயற்சிகள் நடந்துவந்த நிலையில், சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இந்த விவகாரத்தை சரியான முறையில் விசாரித்து நடவடிக்ைக எடுக்காத திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, கண்காணிப்பாளர் ஆண்டாள் ஆகியோர் சென்னைக்கு காத்திருப்போர் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். திருநங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வார்டன் மாரீஸ்வரன், கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதன் விசாரணை அதிகாரியாக புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டார். அவர் இன்று சேலம் மத்திய சிறைக்கு வந்தார்.
இங்கு அடைக்கப்பட்டுள்ள வார்டன் மாரீஸ்வரனிடம் விசாரணை நடத்தி வருகிறார். இவரது அறிக்கைக்கு பிறகு வார்டன் மாரீஸ்வரன் மீது நடவடிக்கை பாயும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார், டிஐஜி வீட்டில் திருடிய நிலையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கைதிகள், அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு பயன்படுத்த கூடாது, சிறையை வீட்டு வெளிவேலைக்கு அழைத்து செல்ல சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள், தடை விதித்திருந்தார். அதையும் மீறி கோவை சிறை ஜெயிலர் சிவராஜன் , கைதிகளை சிறையிலிருந்து வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை வரவழைக்கப்பட்டுள்ளார். இதனால் சிறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post சிறையில் திருநங்கைக்கு பாலியல் துன்புறுத்தல் appeared first on Dinakaran.