×

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் உற்பத்தி விறுவிறுப்பு

*கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை : ஓணம் பண்டிகையை முன்னிட்டு, உடுமலை பகுதியில் வெல்லம் உற்பத்தி விறுவிறுப்படைந்துள்ளது. கூடுதல் விலைக்கு வெல்லம் விற்பனையாவதால் கரும்பு விவசாயிகள்,வெல்லம் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு பயிருக்கு அமராவதி அணை தண்ணீர் முக்கிய நீராதாரமாக உள்ளது.

உடுமலை, மடத்துக்குளம், சாமராயபட்டி, பாப்பன்குளம் குமரலிங்கம், கணியூர், கொழுமம், பழனி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் கணிசமான அளவு கரும்பு பயிரிடப்படுகிறது. இங்கு பயிரிடப்படும் கரும்புகளை ஒப்பந்த அடிப்படையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். ஒப்பந்தம் செய்யாத விவசாயிகள் கரும்புகளை அரவை செய்து வெல்லம் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயந்திரம் பழுது காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே கரும்பு அரவை சரிவர நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆலை முழுவதுமாக இயங்கவில்லை. இதனால், அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் வேறு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இந்நிலையில், வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கரும்புகளை அரவை செய்து வெல்லம் தயாரித்து வருகின்றனர். நாளைமறுநாள் (15ம்தேதி) தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கேரளாவில் வெல்லத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதனால் உடுமலை பகுதியில் வெல்லம் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. சாமராயபட்டியை சேர்ந்த கரும்பு விவசாயியும், வெல்ல உற்பத்தியாளருமான கார்த்திகேயன் கூறியதாவது:அச்சு வெல்லம் தயாரிப்பதற்கான கரும்பு ஒரு டன் ரூ.3700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெட்டுக்கூலி, வண்டி வாடகை, பராமரிப்பு செலவு என அனைத்தும் அதிகரித்துள்ளது. கூலி ஆட்கள் கிடைப்பது பெரும் பாடாக உள்ளது. 100 நாட்கள் வேலை திட்டம் வந்த பிறகு, தொழிலாளர்கள் அனைவரும் அந்த வேலைக்கு சென்றுவிட்டனர். கரும்பு வெட்ட ஆள் கிடைப்பதில்லை. இதனால் அச்சு வெல்லம் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாமராயபட்டியில் மட்டும் 50 வெல்ல உற்பத்தி மண்டிகள் இருந்தன. இதில், 20 மண்டிகளில் வெல்ல உற்பத்தி நடக்கிறது. அதுவும் ஓணம் பண்டிகை வருவதால் இவை இயங்குகின்றன. ஓணம் முடிந்த பிறகு இந்தளவுக்கு வெல்ல உற்பத்தியும் நடைபெறாது. அடுத்து இனி பொங்கல் சமயத்தில்தான் இயங்கும்.தற்போது சுண்டக்காம்பாளையம், பள்ளபாளையம் பகுதியில் இருந்து வரும் கரும்பு மூலம் இங்கு வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.வெல்லம் உற்பத்தியில் அனைத்து பணிகளும் மனித சக்தி மூலம்தான் மேற்கொள்ளப்படுகிறது.

குடிசை தொழிலாகத்தான் இதனை செய்து வருகிறோம். கரும்பு வெட்டுவது, வண்டியில் லோடு ஏற்றி கொண்டு வருவது, அதனை இயந்திரத்தில் பிழிவது, பாகு காய்ச்சுவது, அச்சில் வார்ப்பது, உலர்த்தி தரம் பிரிப்பது, மூட்டை மற்றும் சிப்பமாக கட்டுவது, விற்பனைக்காக வண்டிகளில் ஏற்றுவது என அனைத்தும் தொழிலாளர்கள் மூலம்தான் நடக்கிறது.இந்த சங்கிலி தொடரில் ஒருவர் இல்லாவிட்டால் கூட வெல்லம் தயாரிப்பு முடங்கிவிடும்.

சீசன் முடிந்த பிறகு வெல்லம் உற்பத்தியும் குறைந்து விடுவதால் நிரந்தரமாக இந்த பணிக்கு யாரும் வருவதில்லை. சீசனை முன்னிட்டு தற்போது, ஒரு கிலோ வெல்லம் ரூ.50 என்ற அடிப்படையில், 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1500-க்கு விற்பனையாகிறது. பொள்ளாச்சி மார்க்கெட் மூலம் கேரளாவுக்கு விற்பனையாகின்றன. இதனால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கிறது. ஓணம் முடிந்த பிறகு கிலோ ரூ.43க்கு இறங்கி விடும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் உற்பத்தி விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Onam festival ,Udumalai ,Udumalai, Madathikulam ,Tirupur district ,
× RELATED நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்!!