சென்னை: சென்னை ஐஐடி வளாகத்துக்குள் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அழைத்து வந்து விடுவதற்கு பெற்றோருக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து அவர்களை அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி. எனவே மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள் என பலரும் ஐஐடி சென்னை வளாகத்தில் சென்ற வண்ணம் இருப்பார்கள்.
மிகப்பெரிய பகுதி என்பதால் வாகனங்களில் அதிகம் பயணிப்பதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் கருப்பு வெள்ளை நிற மான் ஒன்று வாகனம் மோதி ஐஐடி சென்னை வளாகத்தில் உயிரிழந்தது. இதனால் வனத்துறை அதிகாரி சென்னை ஐஐடி நிர்வாகத்துக்கு சர்குலர் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில், மான் உயிரிழந்த விவகாரத்தை அடுத்து, வாகனங்களின் பயண வேகம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என்று நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த வேகக் கட்டுப்பாட்டை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை வன விலங்களுக்கு காயம் ஏற்படும் வகையில் வாகனங்கள் பயணித்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், சென்னை ஐஐடி வளாகத்துக்கு அங்குள்ள ஊழியர்கள் அறக்கட்டளை மூலம் மாநில அரசின் மானியத்துடன் நடத்தப்படும் வனவாணி பள்ளி மற்றும் ஒன்றிய அரசால் நடத்தப்படும் கேந்திர வித்யாலயா ஆகிய இரண்டு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு சென்னை ஐஐடி வளாகத்துக்குள் செல்வதற்காக அடையாறு, தரமணி, வேளச்சேரி ஆகிய 3 இடங்களில் நுழை வாயில்கள் உள்ளன. இந்த வழியாக பெற்றோர்கள் சென்று பள்ளி முன்பு தங்கள் குழந்தைகளை விட்டு வருவது வழக்கம்.
இந்த வளாகத்துக்குள் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும் பெற்றோர்கள் இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது மான் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து பெற்றோர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று புதிய கட்டுப்பாடுகளை சென்ைன ஐஐடி நிர்வாகம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பெற்றோர்கள் நுழைவாயில் முன்பு தங்கள் குழந்தைகளை விட்டு செல்ல வேண்டும் என்று பெற்றோர்களை செக்யூரிட்டிகள் கடந்த சில நாட்களாக தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று காலை வேளச்சேரி நுழைவாயில் அருகே திரண்டு தங்களை வழக்கம்போல பள்ளி அருகே செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால் செக்யூரிட்டிகள் அனுமதி மறுத்ததால் சென்னை ஐஐடி நுழைவாயிலை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐஐடி நிர்வாகத்தின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து, வேளச்சேரி போலீசார் அங்கு வந்து பெற்றோர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
* பாதுகாப்பு கேள்விக்குறி?
பெற்றோர்கள் கூறியதாவது: சென்ைன ஐஐடி வளாக நுழைவாயிலில் இருந்து பள்ளி சுமார் இரண்டரை கி.மீ., தூரம் உள்ளது. 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் குழந்தைகளை இங்கேயே விட்டு செல்லும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். குழந்தைகள் அங்கிருந்து பாதுகாப்புடன் பள்ளிக்கு செல்கிறார்களா என்ற பயம் எங்களுக்கு எழுந்துள்ளது. அதுவும் போதிய வாகன ஏற்பாடும் செய்யவில்லை.
அங்கு இயங்கக்கூடிய 3 பஸ்களில் 1500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை அடைத்து செல்கின்றனர். மூச்சு திணறல் ஏற்படுவதாக குழந்தைகள் தெரிவிக்கும்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. சென்னை ஐஐடி நிர்வாகத்தின் இதுபோன்ற திடீர் கட்டுப்பாடுகள் எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே பள்ளி அருகில் வரை குழந்தைகளை விட்டு வர அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றனர்.
The post சென்னை ஐஐடி வளாகத்துக்குள் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வர பெற்றோருக்கு திடீர் கட்டுப்பாடு: அனுமதி மறுத்ததை கண்டித்து முற்றுகையால் பரபரப்பு appeared first on Dinakaran.