சென்னை: கடந்த ஆண்டை விட இந்தாண்டு வணிகவரித்துறையில் ரூ.6,091 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் வணிகவரி ஆய்வு குழு பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தந்தமைக்காக கூடுதல் ஆணையர் ஞானக்குமார் மற்றும் குழுவினருக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அமைச்சர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர், வணிகவரி ஆணையர் ஆகியோரின் தொடர் அறிவுறுத்தல், நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றும் அலுவலர்களின் செயல்பாட்டினால் வணிகவரித்துறையின் மொத்த வரி வருவாய் 2024 ஆகஸ்ட் வரை ரூ.55,807 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இது சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வசூல் செய்யப்பட்ட ரூ.49,716 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரூ.6091 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வசூலை பொறுத்தவரை, 2024 ஆகஸ்ட் மாதம் வரை ரூ.31,338 கோடி வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வசூல் செய்யப்பட்ட ரூ.26,767 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரி வருவாய் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த கூட்டத்தில் வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post வணிகவரித்துறையில் ரூ.6,091 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.