×
Saravana Stores

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா

ஹூலுன்பியர்: சீனாவின் ஹூலுன்பியர் நகரில் 8வது ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி நடக்கிறது. நடப்பு சாம்பியன் இந்தியா தனது 4வது லீக் ஆட்டத்தில் நேற்று கொரிய அணியை எதிர்கொண்டது. முதல் 3 ஆட்டங்களில் வென்ற வேகம், உற்சாகம் கொரியாவுக்கு எதிரான 4வது ஆட்டத்திலும் இந்திய வீரர்களிடம் தொடர்ந்தது. அதன் பலனாக ஆட்டம் தொடங்கிய 8வது நிமிடத்தில் கோல் களத்துக்கு அருகில் கிடைத்த பந்தை மடக்கி அடித்த ஃபீல்டு கோலாக மாற்றினார் இந்திய வீரர் அரய்ஜித் சிங். அடுத்த நிமிடமே கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக்கினார்.

கோலடிக்க தொடர்ந்து முட்டி மோதிய கொரிய அணிக்கு முதல் பாதி முடியும் 30வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை ஜிஹூன் யாங் கோலாக்க, கொரியா நிம்மதி பெருமூச்சு விட்டது. எனினும் முதல் பாதி முடிவில் இந்தியா 2-1 எனற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து 2வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியது இந்தியா. ஆட்டதின் 42வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு உருவானது. அதையும் ஹர்மன்பிரீத் சிங் கோலாக்கி அணியின் முன்னிலையை அதிகரித்தார். அதன் பிறகு கடைசி 15 நிமிடங்கள், இரு அணிகளும் முட்டி மோதியும் ஒரு கோல் கூட விழவில்லை.

அதனால் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் தொடர்ந்து 4வது வெற்றியை ருசித்தது. கூடவே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை உறுதிச் செய்த இந்தியா அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது. எல்லா அணிகளும் தலா 4 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் பாகிஸ்தான், கொரியா, மலேசியா, சீனா அணிகள் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கின்றன. எனினும் யாருக்கு எந்த இடம் என்பது நாளை தெரியும். ஜப்பான் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

The post ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : Asian Championship Hockey ,India ,Hulunbier ,8th Asian Championship Cup of Hockey ,Hulunbier, China ,Korea ,Korea… ,Dinakaran ,
× RELATED பழங்குடியினரின் வாழ்க்கையை வரையறுக்கும் தீபாவளி!