×
Saravana Stores

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு, வன்முறை: 52 பேர் அதிரடி கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நாகமங்கலாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கல்வீச்சு வன்முறையாக வெடித்தது. 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் நாகமங்கலாவில் புதன்கிழமை இரவு விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து சென்றனர். விநாயகர் ஊர்வலம் பதரிகொப்பலு கிராமம் அருகே வந்த போது இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விஷமிகள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் பதில் தாக்குதல் நடத்தினர். மேலும் கடைகளை அடித்து நொறுக்கி பொருட்களுக்கும், வாகனங்களுக்கும் தீவைத்தனர். உடனே பாதுகாப்புக்கு சென்ற போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி இளைஞர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் கலவரம் தொடர்பாக 52 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் நாளை வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘சமூகத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதை சாதாரணமாக எடுத்துகொள்ளமாட்டோம். மதத்தை அடிப்படையாக வைத்து வன்முறையில் ஈடுபடுவோர் மீது சாதி, மத வேறுபாடின்றி கடும் நடவடிக்கை பாயும். சம்பவ பகுதியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கலவரம் நடந்த சம்பவத்தை சிசிடிவியில் கண்காணித்து இருதரப்பில் இருந்து 52 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். சில போலீசாரும் காயமடைந்துள்ளனர். போலீசார் நடவடிக்கைக்கு பிறகு தற்போது நாகமங்கலா பகுதியில் அமைதி ஏற்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது’ என்றார்.

The post கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு, வன்முறை: 52 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Stone ,Vinayagar idol procession ,Karnataka ,Bengaluru ,Ganesha idol procession ,Nagamangala ,Mandya district of ,Ganesha ,Nagamangala, Karnataka ,
× RELATED எருமையூர் பகுதியில் 52 கல் உடைக்கும்...