×
Saravana Stores

சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மகாவிஷ்ணு தொடர்பான விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கை தலைமைச்செயலாளரிடம் சமர்ப்பிப்பு

சென்னை: சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் விசாரணை முடிவடைந்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை மாதிரி பள்ளியில் பொது தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்வில், திருப்பூரைச் சேர்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர், அறிவியலுக்கு சம்பந்தமில்லாத மூடநம்பிக்கைகளை விதைக்கும் விதமாக கடந்த ஜென்மம், பாவ புண்ணியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவர் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, இவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, தற்பொழுது மகாவிஷ்ணு விசாரணை காவலில் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர், மூடநம்பிக்கையாக மகாவிஷ்ணு பேசிய அதே மேடையில் அவரை எதிர்த்து கேள்வி கேட்ட பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை அமரவைத்து பெருமைப்படுத்தி, இவரை போன்றே அனைத்து ஆசிரியர்களும் செயல்பட வேண்டுமென கூறினார். தொடர்ந்து அன்றைய தினமே பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் துறை ரீதியாக விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த வெள்ளி, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று நாட்கள் விரிவான விசாரணை மேற்கொண்டது. பள்ளிக்கு நேரடியாக சென்ற பள்ளி கல்வித்துறை இயக்குனர், இதுபோன்று கல்விக்கு சம்பந்தமில்லாத நபர்களை சொற்பொழிவாற்ற அழைத்து வந்தது யார், அனுமதி கொடுத்தது யார், பள்ளி மேலாண்மை குழு சம்பந்தப்பட்டுள்ளதா, முறையாக அனுமதி பெறப்பட்டதா, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா, அவருக்கு கட்டணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தினர்.

மேலும் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளி ஆசிரியர்களை நேரடியாக விசாரணை நடத்தி, சொற்பொழிவன்று என்ன நடந்தது, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் யார், யாரிடம் அனுமதி பெற்றார்கள் என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமான விளக்கம் பெறப்பட்டது. தொடர்ந்து கூடுதல் தகவல்களுக்காக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குனரின் விரிவான விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி ஐ.ஏ.எஸ் மூலமாக தலைமைச் செயலாளரிடம் முறையாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அடுத்த கட்டமாக தவறு செய்தவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதை பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

The post சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மகாவிஷ்ணு தொடர்பான விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கை தலைமைச்செயலாளரிடம் சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Mahavishnu ,Chief Secretary ,CHENNAI ,Director of School Education ,Kannappan ,Ashok Nagar Girls High School ,Saidapet Model School ,Dinakaran ,
× RELATED முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்