×

பங்குசந்தை, ஆன்லைன் வர்த்தகம், பணம் இரட்டிப்பு திட்டத்தில் ரூ.2,200 கோடி மோசடி புகாரில் நடிகை கைது: கணவரும் சிக்கினார்; அசாம் போலீஸ் அதிரடி

கவுகாத்தி: பங்குசந்தை, ஆன்லைன் வர்த்தகம், பணம் இரட்டிப்பு திட்டத்தில் ரூ.2,200 கோடி மோசடி செய்த புகாரில் சிக்கிய நடிகை சுமி போரா மற்றும் அவரது கணவரை அசாம் போலீஸ் அதிரடியாக கைது செய்தது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகை சுமி போரா என்பவருக்கும் தர்கிக் போரா என்பவருக்கும், கடந்த சில ஆண்டுக்கு முன் ஆடம்பர திருமணம் நடந்தது. மேலும் சுமி போரா, அவரது கணவர் தர்கிக் போரா, சகோதரர் ரஜிப் போரா மற்றும் அவரது மனைவி ஜிங்கி மிலி உள்ளிட்ட சிலர், 60 நாட்களில் இரட்டிப்பு பணம் தருதல் போன்ற திட்டங்களில் பலரிடம் மோசடி செய்துள்ளனர். மேலும் பங்குசந்தை வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. கடந்த வாரம், முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திப்ருகாரில் பிஷால் புகன் உள்ளிட்ட சிலரை, அசாம் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. இவ்வழக்கில் நடிகை சுமி போரா உள்ளிட்ட சிலர் தலைமறைவாக இருப்பதால், அவர்களுக்கு எதிராக அசாம் காவல்துறை ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தலைமறைவான சுமி போரா வெளியிட்ட வீடியோ பதிவில், ‘என்னை பற்றியும், எனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பற்றியும் அவதூறான செய்திகள் வெளியாகின்றன. போலீஸ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். நான் தலைமறைவாக வாழவில்லை. ஊடகங்களில் வெளியான செய்திகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தலைமறைவாக இருந்தேன். ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை காட்டிலும், நீதிமன்றங்கள் எனக்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் 10 சதவீதம் கூட உண்மையில்லை. ஓரிரு நாளில் சரணடைவேன்’ என்று கூறினார். சுமி போரா இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் எங்கு சரணடையப் போகிறார் என்ற விபரத்தை அவர் வீடியோவில் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து புலனாய்வு வட்டாரங்கள் கூறுகையில், ‘ரூ.2,200 கோடி மதிப்பிலான ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட நடிகை சுமி போரா மற்றும் அவரது கணவர் தர்கிக் போரா ஆகியோரை இன்று அசாம் போலீசார் கைது செய்தனர். ஜோர்ஹாட் மாவட்டம் தியோக்கில் பதுங்கியிருந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில தனியார் நிறுவனங்களின் ‘காஸ்மெடிக் அக்கவுண்டிங்’ மூலம் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 60 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 1,500க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணமோசடி செய்துள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றன.

 

The post பங்குசந்தை, ஆன்லைன் வர்த்தகம், பணம் இரட்டிப்பு திட்டத்தில் ரூ.2,200 கோடி மோசடி புகாரில் நடிகை கைது: கணவரும் சிக்கினார்; அசாம் போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Assam ,Guwahati ,Sumi Bora ,Assam Police ,Udaipur, Rajasthan ,Dinakaran ,
× RELATED அதானி விவகாரத்தில் போராட்டம் கண்ணீர்...